பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக அவதூறு திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை: 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: திருநங்கைகள் அமைப்பு தலைவிகள் சிலர் சக திருநங்கைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிப்பதாக யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசி வரும் திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை எடுக்க கோரி 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தேசிய திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாவட்ட திருநங்கைகள் அமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூட்டாக நேற்று புகார் மனு அளித்தனர்.

அதில், சென்னையில் 21 ஜமாத்துகள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளனர். அதில் ஆலந்தூர் பகுதியில் உள்ள மந்த்ரா என்ற திருநங்கை சில நாட்களாக யூடியூப் சேனல்களில், சென்னையில் உள்ள 21 ஜமாத்துகளின் திருநங்கை தலைவிகள், தங்களது அமைப்பில் உள்ள திருநங்கைகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வலியுறுத்துவதாகவும், அதன் மூலம் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வருவதாகவும் தவறான கருத்தை பேசி வருகிறார்.

இதுகுறித்து திருநங்கைகள் அமைப்பு சார்பில் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்படி அவதூறாக பேசிய திருநங்கை மந்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை மந்த்ராவை போலீசார் கைது செய்யவில்லை. இதற்கிடையே மீண்டும் மந்த்ரா சென்னையில் உள்ள திருநங்கைகள் தலைவிகள் குறித்து யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், திருநங்கைகளை தவறாக வழிநடத்தி பணம் சம்பாதிப்பதாக தொடர்ந்து பேசி வருகிறார். எனவே திருநங்கை மந்த்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர். புகாரின்படி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உயர் காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக அவதூறு திருநங்கை மந்த்ரா மீது நடவடிக்கை: 300க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: