×

கடும் குளிர் நிலவுவதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

சேந்தமங்கலம், நவ.11: கொல்லிமலையில், கடும் குளிர் நிலவுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தொடர் மழையின் காரணமாக, கொல்லிமலையில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. மலைப்பாதையில் நண்பகல் 12 மணி வரை, பனிமூட்டம் அதிகம் இருப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனபாறை அருவிகளில் மிதமாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர், அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு, தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். பின்னர், வாசலூர்பட்டி ஏரியில் குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர். மாலையில் வீடு திரும்பும் பொழுது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் மிளகு, தேன், அன்னாசி, கொய்யா, மலை வாழைப்பழம், பலா உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர்.

The post கடும் குளிர் நிலவுவதால் கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kollimalai ,Senthamangalam ,Namakkal district ,Tamil Nadu ,Andhra Pradesh ,Kerala ,Karnataka ,Pondicherry ,
× RELATED மரவள்ளி கிழங்கு விலை டன்னுக்கு ₹1000 சரிவு