சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக். மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் 6 மாதமாக மாற்றம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படித்து வரும் மாணவர்கள் அதிகபட்சமாக 3 மாதங்களுக்கு கோடைகால பயிற்சிக்கு (சம்மர் இன்டர்ன்ஷிப்) செல்கிறார்கள். இந்த காலஅளவை அதிகரிக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்களும், மாணவர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், அதனை சென்னை ஐ.ஐ.டி. மாற்றியுள்ளது. அதன்படி, 6 மாத இன்டர்ன்ஷிப்பாக மாற்றி அறிமுகம் செய்துள்ளது.

பி.டெக். மாணவர்கள் அதிக முன்வேலைவாய்ப்பு சலுகைகளை பெறுவதற்கும், சிறந்த தொழில் முறை திறமைகளை பெறுவதற்கும் இந்த பயிற்சிகள் ஒரு வாய்ப்பாக அமையும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தொழில் துறை மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் கருத்துகளை பெற்ற பிறகே இந்த முயற்சி எடுக்கப்பட்டு இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

2024-25ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் தங்களுடைய 6வது செமஸ்டரில் இந்த இன்டர்ன்ஷிப்பை எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கட்டாய பாடப்பிரிவுகளை (கோர் கோர்சஸ்) தேர்வு செய்து தேர்ச்சி பெற வேண்டிய நிலை இருக்கும். இனிமேல் அது இருக்காது. மேலும் விருப்ப படிப்புகளை முந்தைய செமஸ்டர்களிலோ அல்லது அதற்கு பிறகு வரும் செமஸ்டர்களிலோ அவர்கள் முடித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் நிறுவனங்கள், மாணவர்களை சிறப்பாக மதிப்பிட முடியும் என்றும், வளாக நேர்காணலின்போது குறைவான போட்டிக்கு வழிவகுக்கும் என்றும், மாணவர்களுக்கும் நிறுவனத்தை மதிப்பிடுவதற்கு அதிக நேரம் கிடைக்கும் என்றும் சென்னை ஐ.ஐ.டி. கூறியுள்ளது. இதேபோல், ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளில் கவனம் செலுத்த சென்னை ஐ.ஐ.டி. திட்டமிட்டு வருகிறது.

The post சென்னை ஐ.ஐ.டியில் பி.டெக். மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் 6 மாதமாக மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: