இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தெலுங்கு மக்கள், நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார் அளித்து வருகின்றனர். அதேநேரம் பல்வேறு தரப்பினரும் கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார். மேலும், கோயம்பேடு காவல் நிலையத்திலும் தெலுங்கு அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
நடிகை கஸ்தூரி மீது புகார்கள் குவிந்ததால் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி அவர் மீது எழும்பூர் போலீசார் கடந்த வாரம் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 192, 196(1),(ஏ), 353(1)(பி) மற்றும் 353(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நடிகை கஸ்தூரி பேச்சால் இரு சமுதாயங்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவுவதால், அவரிடம் அவதூறாக பேசியது தொடர்பாக நேரில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் போலீசார் நேற்று முன்தினம் சம்மன் வழங்க போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது. அங்கிருந்தே நடிகை கஸ்தூரிக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது, அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் போலீசார், கஸ்தூரி வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் விசாரித்த போது, கஸ்தூரி இரவோடு இரவாக வீட்டை பூட்டிவிட்டு அவசரமாக சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.
எனவே, நடிகை கஸ்தூரி போலீசாரின் கைதுக்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதேநேரம் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி திருப்பரங்குன்றம் போலீசார் 6 சட்டபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் திருப்பரங்குன்றம் போலீசாரும் நடிகை கஸ்தூரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதேபோல் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிராமணர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் இடஒதுக்கீடு வந்த பிறகு லஞ்சம் மலிந்துவிட்டது. இடஒதுக்கீட்டினால் அரசு பணிக்கு வந்தவர்கள் செய்த ஊழல்களால் சொத்துக்களை சேர்த்துள்ளனர் என கஸ்தூரி பேசியிருந்தார். இது அரசு ஊழியர்கள் மத்தியிலும் ஆத்திரத்தை மூட்டியது. அதை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியிருந்த நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வருக்கு தமிழ்நாடு தலைமை செயலகம் சங்கம், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி-எஸ்டி பணியாளர் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதற்கிடையே புகாரின் மீது நடிகை கஸ்தூரியை கைது செய்ய கோரி கும்பகோணம், மதுரை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் தெலுங்கு அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடிகை கஸ்தூரிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
* ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்வருக்கு தமிழ்நாடு தலைமை செயலகம் சங்கம், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை, டாக்டர் அம்பேத்கர் எஸ்சி-எஸ்டி பணியாளர் நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
* நடிகை கஸ்தூரியை கைது செய்ய கோரி கும்பகோணம், மதுரை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் தெலுங்கு அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
The post போலீசாரின் கைதுக்கு பயந்து வீட்டை பூட்டிவிட்டு நடிகை கஸ்தூரி தப்பி ஓட்டம்: தலைமறைவானவரை பிடிக்க தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.