பட்டாசு ஆலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விருதுநகர்: பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் சென்றார்.

அன்று பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு செய்த முதல்வர், தான் வாங்கி வந்த கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை அவர்களுக்கு வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த மாணவிகள், முதல்வரை அப்பா என்று அழைத்து மகிழ்ந்தனர். இதையடுத்து, விருதுநகரில் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இரவில் விருதுநகரில் தங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டாவது நாளான நேற்று காலை, விருதுநகரில் ₹77.12 கோடியில் 6 தளங்களுடன் கூடிய புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் பட்டம்புதூரில் நடந்த விழாவில் 57,536 பயனாளிகளுக்கு ₹417.21 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார். இதில் 40,148 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் 17,408 பேருக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
விருதுநகர் பெயரை சொன்னதும் ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் நினைவிற்கு வரக்கூடியவர் வீரத்தியாகி சங்கரலிங்கனார். மெட்ராஸ் ஸ்டேட் என அழைக்கப்பட்ட நமது தாய் இல்லத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென உயிர் தியாகம் செய்தவர். இன்று நாம் தமிழ்நாடு என பெருமையோடு சொல்ல சங்கரலிங்கனாரும், அண்ணாவும் காரணம். தமிழ்நாட்டு மண் ஏராளமான தலைவர்களை தியாக சீலர்களை பெற்றெடுத்த மண். ஈரோடு பெரியார், காஞ்சி அண்ணா, திருவாரூர் கலைஞரை உருவாக்கியது.
இந்த விருதுநகர் மண், பெருந்தலைவர் காமராஜரை நமக்கெல்லாம் தந்தது. காமராஜர் பெயரை சொன்னதும் பல நினைவுகள் எனக்கு வரும். உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தினார். இதை என்னால் எப்போதும் மறக்க முடியாது. காமராஜர் மறைந்த போது ஒரு மகன் போல் அவரது இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர் கலைஞர்.

அரசு மரியாதையுடன் அடக்கம், நினைவு மண்டபம், கடற்கரை சாலைக்கு காமராஜர் பெயர், குமரியில் காமராஜர் மணிமண்டபம், நெல்லையில் சிலை, காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என அறிவித்தவர் கலைஞர். காமராஜர் உதவியாளர் வைரவனுக்கு பணி, வீடு ஒதுக்கி, காமராஜரின் சகோதரி நாகம்மாளுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் என காமராஜரை போற்றியவர் கலைஞர். இதை தமிழ்நாடு மறக்காது.

கல்வி செலவை ஏற்கும்: சாதனைகள் செய்து வரும் விருதுநகர் மாவட்டத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் தேவைப்படும் திட்டங்களை கோரிக்கையாக தெரிவித்தனர். பட்டாசு ஆலைக்கு சென்றிருந்தேன். அங்கிருந்த பணியாளர்கள் சில கோரிக்கைகள் வைத்தனர். அது தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை இனி அரசே ஏற்கும். உதவிகளை மாவட்ட அளவில் முடிவு செய்து வழங்க கலெக்டர் தலைமையில் தனி நிதியம் உருவாக்கப்படும். இதற்கு முதற்கட்ட நிதியாக ₹5 கோடியை அரசு வழங்கும்.

10,03,824 பேருக்கு இ.பட்டா: திமுக ஆட்சிக்கு வரும் முன்பாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்தேன். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என அறிவித்தேன். ஆட்சி பொறுப்பேற்று அதற்கென தனித்துறையை உருவாக்கி நடவடிக்கை எடுத்தேன். பெரும்பான்மையான மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்பட்டது. அதில் பெரும்பான்மையான மனுக்களில் இடம் இல்லை, வீடு இல்லை, புறம்போக்கு நிலத்தில் வாழ்ந்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

மக்கள் குறைகளை தீர்ப்பது ஒரு அரசின் கடமை. வருவாய்த் துறைக்கான உத்தரவு பிறப்பித்தேன். அதில் வீடற்ற ஏழை மக்களுக்கு இலவசமாக எந்த அளவிற்கு இடம் வழங்க முடியுமோ அந்த அளவிற்கு வழங்க உத்தரவிட்டேன். நத்தம் புறம்போக்கு நிலங்கள் போதுமான அளவிற்கு இல்லை.

அதனால் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களை நத்தமாக வகை மாற்றம் செய்து வீடற்ற ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டேன். அந்த நடவடிக்கையால் 2021ல் திராவிட மாடல் ஆட்சி அமைந்தது முதல் இதுவரை 10,03,824 பேருக்கு இ.பட்டாக்கள் வழங்கியிருப்பது மிகப்பெரிய சாதனை. நில உரிமையை வழங்குவதில் திராவிட மாடல் ஆட்சி தலைசிறந்த ஆட்சியாக நடந்து வருகிறது. சமூகத்தில் சமூக நீதியும் பொருளாதாரத்தில் சம நீதியும் வழங்க தோற்றுவிக்கப்பட்ட இயக்கமே திராவிட இயக்கம். அதிக நிலங்களை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கிய ஆட்சி திமுக ஆட்சி.

உழைப்பின் பலன்: ஆட்சி பொறுப்பேற்ற போது, மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டிற்கு விளக்காக இருப்பேன், நாட்டிற்கு தொண்டனாக இருப்பேன், மக்கள் கவலைகளை தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன் என சொன்னேன். அப்படி தான் செயல்படுகிறேன். உங்களது அன்பும் ஆதரவும் தான் ஸ்டாலின் பலம். தமிழ்நாட்டை உயர்த்த போராடுவேன். உழைப்பின் பலன் தான் எல்லா புள்ளிவிபரங்களிலும் வெற்றிகரமாக ஒலித்துக் கொண்டு இருக்கிறது. முதலிடத்திற்கு வந்து விட்டோம் என திருப்தியடையவில்லை. நமக்கு பின்னே வெற்றி பெற வேண்டுமென பல பேர் வந்து கொண்டு இருக்கின்றனர். இன்னும் வேகமாக ஓட வேண்டுமென நினைக்கிறேன். இதைத்தான் மற்ற அமைச்சர்கள், அரசு அலுவலர்களிடம் எதிர்பார்க்கிறேன். அந்த எதிர்பார்ப்பில் மாவட்டம் தோறும் கள ஆய்வை தொடர்ந்து நடத்தி வருகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

உடல் உறுப்பு தானம் பட்டாசு தொழிலாளி குடும்பத்திற்கு பட்டா
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், மேட்டமலை கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளி ராமர். இவர் கடந்த செப். 30ம் தேதி நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது ராமரின் மனைவி துளசிமணி, அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். இதனையடுத்து நேற்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துளசிமணிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். பட்டாவை பெற்றுக்கொண்ட துளசிமணி நெகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

ரூ.98.47 கோடியில் முடிந்த திட்டப் பணிகள் துவக்கம்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலமைச்சர், அமைச்சர்களுக்கு ‘கரிசல் இலக்கியம்’ எனும் புத்தகத் தொகுப்பை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். விழாவில் ₹98.47 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார். மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டது. அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்ட சிறப்புகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.

The post பட்டாசு ஆலை விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி செலவை அரசே ஏற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: