இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு: பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறியல் போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 393 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு மீன்பிடித்து கொண்டிருந்தபோது 10க்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், தங்கச்சிமடத்தை சேர்ந்த சகாயராஜ், கீதன், சுவிதர் ஆகிய மூன்று பேரின் படகுகளை சிறைபிடித்தனர்.

அதில் இருந்த ஜெரோம் (48), மரிய ரொனால்ட் (45), சரவணன் (46), யாக்கோப் (35), டைதாஸ் (40), ரெக்ஸ் டென்னிஸ் (35), ஆனந்த் (29), அமல் தீபன் (30), சுவிதர் (51), கிறிஸ்துராஜா (45), விஜய் (43), ஜன்னல் (27), லிங்கம் (50), சர்மிஸ் (32), சுல்தாஸ் (41), மார்ஷல் டிட்டோ (41), தயாளன் (52), தோமஸ் ஆரோக்கியராஜ் (45), ஜான் பிரிட்டோ (58), ஜெயராஜ் (37), சண்முகவேல் (54), அருள் (40), கிங்ஸ்லே (45) ஆகிய 23 மீனவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், மூன்று படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பின்னர் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். ஒரே நாளில் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் நேற்று பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் பிரதிநிதி எமரிட் தலைமையில் நடைபெற்றது.

இதில், இலங்கை கடற்படை கைது செய்த 23 மீனவர்களையும், பறிமுதல் செய்த மூன்று படகுகளையும், ஒன்றிய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு விடுதலை செய்ய வேண்டும். ஏற்கனவே இலங்கையில் உள்ள மீனவர்களையும் அனைத்து வகை படகுகளையும் மீட்டுத் தந்து பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நாளை (நவ. 12) பாம்பன் சாலை பாலத்தில் மீனவர்களின் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

* மண்டபம் முகாமில் இருந்து தப்பமுயற்சி சிறுவர்கள் உள்பட 9 பேர் நடுக்கடலில் சிறைபிடிப்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரிகோணமலையை சேர்ந்த நிரோஷன், இவரது மனைவி சுதா, குழந்தைகள் அஜய் (14), விதுஸ்வதிகா (13), அபிநயா (4) ஆகியோர் படகில் தப்பி ராமேஸ்வரம் வந்தனர். இதையடுத்து 5 பேரும் மண்டபத்தில் உள்ள அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அதே முகாமில் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஞானஜோதி (47), ஜித்து (13), மகேந்திரன் (51) மற்றும் பதிவு இல்லாமல் வசித்த பூலேந்திரன் (54) ஆகிய 4 பேரும் வசித்து வந்தனர்.

இவர்கள் 9 பேரும் மீண்டும் இலங்கை செல்ல திட்டமிட்டனர். இதற்காக நாகப்பட்டினத்தில் இருந்து நாட்டுப்படகை விலைக்கு வாங்கியுள்ளனர். பின்னர் 9 பேரும் நேற்று முன்தினம் மாலை மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து அனுமதியின்றி இலங்கைக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் சென்றபோது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் இவர்களது நாட்டுப் படகை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர். விசாரணைக்கு பிறகு இவர்கள் 9 பேரும் மேல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் சிறைபிடிப்பு: பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: