×

செங்கல்பட்டு அரசு மருத்துவர் ஏரியில் குதித்து தற்கொலை சேத்துப்பட்டு அருகே பரபரப்பு மன அழுத்தத்தால் விடுப்பில் இருந்த

சேத்துப்பட்டு, நவ. 10: மன அழுத்தத்தால் விடுப்பில் இருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கண் மருத்துவர் சேத்துப்பட்டு அருகே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் ஜெஎம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(51). இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கண் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சேலம் செல்வதாக கார் ஒன்றை ஏற்பாடு செய்து காஞ்சிபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த குமார் மகன் உமேஷ் என்ற டிரைவருடன் சென்றுள்ளார். அப்போது வழியில் பெருநகரில் உள்ள அவருடைய கிளினிக்கில் இறங்கி அங்குள்ள சுவாமி சிலையை கும்பிட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறி புறப்பட்டார். பின்னர் அவர் டிரைவரிடம் எந்த வழியாக செல்கிறாய் என கேட்டதற்கு, ‘திண்டிவனம் வழியாக சேலம் செல்லலாம்’ என தெரிவித்துள்ளார். அதற்கு சீனிவாசன் எனக்கு வேலூரில் பணம் வர வேண்டி உள்ளது. எனவே நீ வேலூர் செல் என கூறினாராம்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே கார் வந்தபோது ஒரு ஓட்டலில் சாப்பிடலாம் காரை திருப்பு என கூறியுள்ளார். டிரைவர் வழி தெரியாமல் சிலரிடம் கேட்டு பெரணமல்லூருக்கு வந்தார். அங்கு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சேத்துப்பட்டு வழியாக மார்க்கெட் கமிட்டி அருகே சென்றபோது காரில் வைத்திருந்த பை ஒன்றை எடுத்து வெளியே வீசியுள்ளார். அதில் மருந்துகள், செக் புக் ஆகியவை இருந்தது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் அருகில் இருந்த டீக்கடையில் கொடுத்தனர். சிறிது தொலைவு சென்றபோது டாக்டர் தன்னுடைய சட்டையை கழற்றி உள்ளார். அப்போது டிரைவர் உமேஷ் வண்டியை நிறுத்தி நீங்க சட்டையை போடுங்க போகலாம் என கூறினார். இதை கண்டுகொள்ளாமல் டாக்டர் சீனிவாசன் காரில் இருந்து இறங்கி சென்றுவிட்டார். அச்சமடைந்த டிரைவர் அருகே இருந்த சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே டாக்டர் சீனிவாசன் நெடுஞ்குணம் ஏரியில் குதித்தார். இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சீனிவாசன் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நாராயணன், வேலு, ஆனந்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சீனிவாசனின் தந்தை கோபாலகிருஷ்ணன்(79) கொடுத்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சீனிவாசனுக்கும் அவரது மனைவி அனிதாவுக்கும் விவகாரத்து ஆகிவிட்டது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மேலும் டாக்டர் சீனிவாசன் சமீபகாலமாக மன அழுத்தத்தால் அவதிப்பட்டு விடுப்பில் இருந்துள்ளார் என்பது தெரியவந்தது. அரசு மருத்துவர் மன அழுத்தத்தால் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post செங்கல்பட்டு அரசு மருத்துவர் ஏரியில் குதித்து தற்கொலை சேத்துப்பட்டு அருகே பரபரப்பு மன அழுத்தத்தால் விடுப்பில் இருந்த appeared first on Dinakaran.

Tags : Chengalpattu government ,Sethupattu ,Chengalpattu Government Hospital ,Srinivasan ,JM Nagar, Kanchipuram ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த எருமைமாடு மீட்பு