தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சமாதானபுரத்தைச் சேர்ந்தவர் சகாயராஜ் (53). இவர் பல்வேறு மேடைக் கச்சேரிகளில் கட்சிப்பாடல்களை பாடி பிரபலமானவர். இவர் கடந்த 2010ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாகன கடன் வாங்கியுள்ளார். கடனை சரிவர கட்ட முடியாததால் கடந்த 2012ம் ஆண்டு அந்த நிதி நிறுவனம் சகாயராஜின் காரை எடுத்துக் கொண்டு, கடன் தொகைக்கு காரை ஏலம் விட்டு கடனை செட்டில்மென்ட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நிதி நிறுவனம் வாகன கடன் நிலுவைத் தொகையாக இன்னும் ரூ.30,000/- இருப்பதாக கூறி கடந்த சில மாதங்களாகவே தினமும் சகாயராஜ் வீட்டிற்கு சென்று நிதி நிறுவன ஊழியர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட சகாயராஜ், தனியார் நிதி நிறுவனம் தனது சொத்துக்களை முடக்க பார்ப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சகாயராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நிதி நிறுவன நெருக்கடியால் வீடியோ வெளியிட்டு பாடகர் தற்கொலை appeared first on Dinakaran.