×
Saravana Stores

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தீர்மானத்துக்கு எதிராக அமளி பாஜ எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளியேற்றம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் தொடர்ந்து 3வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து 12 பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் அவாமி இதிஹாத் கட்சி எம்எல்ஏ ஆகியோர் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சமீபத்தில் நடந்த ஜம்மு காஷ்மீர் பேரவை தேர்தலில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்றார்.

உமர் முதல்வரான பின் நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த சட்டமன்ற கூட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை ஏற்படுத்துவதற்கான புதிய தீர்மானத்தை துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜ எம்எல்ஏக்கள்,தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்,மூன்றாவது நாளான நேற்றும் இந்த விவகாரத்தை பாஜ எம்எல்ஏக்கள் எழுப்பினர்.பாகிஸ்தானின் திட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என்று கூறி அவையின் மைய பகுதிக்கு வந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் அமளியில் ஈடுபட்ட 12 பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் அவாமி இதிஹாத் கட்சி உறுப்பினர் ஷேக் குர்ஷித்தை அவையில் இருந்து வெளியேற்ற அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதை கண்டித்து மற்ற 11 பாஜ எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.

* போட்டி பேரவை கூட்டம்
அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பாஜ எம்எல்ஏக்கள் சட்ட பேரவை கட்டிடத்துக்கு வெளியே போட்டி பேரவை கூட்டம் நடத்தினர். இதில்,சிறப்பு அந்தஸ்து கோரி நிறைவேற்றப்பட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டவிரோதம் மற்றும் அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும் என்று எம்எல்ஏக்கள் பேசினர்.

* காலவரையின்றி பேரவை ஒத்திவைப்பு
காஷ்மீர் சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறிய பிறகு நேற்று சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் 5 நாள் சட்டப்பேரவை கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

The post ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தீர்மானத்துக்கு எதிராக அமளி பாஜ எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Amali ,BJP MLAs ,Jammu and ,Kashmir ,Srinagar ,Jammu and Kashmir ,Awami Itihad Party MLA ,House ,
× RELATED ஜம்மு- காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு...