×
Saravana Stores

ஆசிரியர் கோரிக்கைகள் தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும்: பள்ளி கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஆசிரியர்களின் கோரிக்கைகள் சட்டமன்ற தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறையில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கான ஓய்வு ஊதியத் திட்டம் நிறுத்தப்பட்டு பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் அரசு ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக புதிய பங்களிப்பு ஓய்வு ஊதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது ஆசிரியர்களின் கோரிக்கையாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் 20க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியின் போது, ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் பல ஆசிரியர்கள் மீது குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டது.

சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அதனால் ஆசிரியர்கள் இடையே பெரும் எழுச்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஆசிரியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அதன்படி, ஆசிரியர்கள் பொதுமாறுதலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.

ஆசிரியர்களுக்கான உடல் நலக் காப்பீடு மற்றும் பெண்களுக்கான விடுப்புகள் அறிவிக்கப்பட்டன. ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப் படி உடனடியாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும், பழைய ஓய்வு ஊதிய திட்டம் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அவற்றில் பழைய ஓய்வு ஊதிய திட்டம் கொண்டு வருதல், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் களைதல், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்தல், உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட கோரிக்கைளை முன்வைத்து போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

அப்போதெல்லாம் அவர்களை அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். மேலும், அவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்து வருகிறார். பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி, பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் தலைமை வகித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறையில் நிறைவேற்றப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அந்த துறையில் நிலுவையில் உள்ள திட்டங்கள்,கோரிக்கைகள் குறித்தும் கேட்டு விவாதித்தார். அப்போது ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் மற்றும் அவர்களின் கோரிக்கைகள், நிதி சார்ந்த பிரச்னைகள் குறித்தும் கேட்டார்.

அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இது தவிர பள்ளிக்கல்வித்துறைக்காக அறிவிக்கப்பட்ட திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், அறிவுறுத்தினார். மேலும், ஆசிரியர்கள் கோரிக்கைகள் சட்ட மன்றத் தேர்தலுக்குள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.

The post ஆசிரியர் கோரிக்கைகள் தேர்தலுக்குள் நிறைவேற்றப்படும்: பள்ளி கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,CHENNAI ,M.K.Stalin ,School Education Department ,education department ,Tamil Nadu ,education ,Dinakaran ,
× RELATED அலுவலகங்களுக்கு வெளியே இருந்து...