பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகு, ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவுற்றபின், திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத திருக்கோயில்களை கண்டறிந்து குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூர் கந்தசஷ்டி, திருவண்ணாமலை தீபம், திருத்தணி திருக்கார்த்திகை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி போன்ற பெருவிழாக்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு இறையன்பர்கள் மனநிறைவாக சுவாமி தரிசனம் செய்கின்ற வகையில் உரிய ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் சுமார் 8 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நானும் அந்நிகழ்வில் பங்கேற்றேன். விழா முடிந்ததும் பக்தர்கள், கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான வசதிகளை இந்த ஆட்சி செய்து தந்து கொண்டிருக்கின்றது என்றும் முதல்வருக்கும், துறைக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
900 ஆண்டுகள் பழமை வாய்ந்த புரசைவாக்கம், கங்காதரேசுவரர் திருக்கோயிலுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, இத்திருக்கோயிலில் ரூ. 4.82 கோடி செலவில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் திருக்கோயில் நிதியின் மூலம் ரூ.2.92 கோடி செலவில் 14 திருப்பணிகளும், உபயதாரர்கள் மூலம் ரூ.1.90 கோடி செலவில் 22 திருப்பணிகளும் நடைபெற்றுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.1.29 கோடி செலவில் திருக்குளம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இத்திருக்கோயிலுக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்ய பணிகள் தொடங்கப்பட்டு அதில் ரூ.30 லட்சம் செலவில் தங்கத்தேருக்கான மரத்தேர் திருப்பணி நிறைவுற்றுள்ளது. மேலும், ரூ.81 லட்சம் செலவில் புதிய மரத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றபின் இன்று நடைபெற்ற 12 திருக்கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து இதுவரை 2,265 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரும் 11 மற்றும் 14 ஆம் தேதிகளில் சுமார் 60 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500 திருக்கோயில்களில் குடமுழுக்கு நிறைவுபெறும்.
திருக்கோயில் திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் நம்பிக்கையோடு, முழுமனதுடன் நிதி வழங்கி வருகின்றனர். இதுவரை ரூ. 1,103 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளனர். மன்னர்களாலும், முன்னோர்களாலும் கட்டப்பட்டு பொக்கிஷங்களாக திகழும் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் அரசு ரூ.300 கோடியினை மானியமாக வழங்கியுள்ளது. மேலும் உபயதாரர்கள் ரூ.126 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளனர். இதன்மூலம் ரூ.426.62 கோடி மதிப்பீட்டில் 274 தொன்மையான திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 37 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இந்த ஆட்சி ஏற்பட்டபின் திருக்கோயில் திருப்பணிகளுக்கு மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழுக்களால் உடனுக்குடன் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 10,460 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.5,847 கோடி மதிப்பீட்டில் 20,806 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றில் 9,183 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிருலிருந்து மீட்டெடுக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை ரூ. 6,847 கோடி மதிப்பிலான 7,115.56 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களுக்கு சொந்தமான 1,75,995 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சிலை திருட்டு வெகுவாக குறைந்துள்ளது. முதலமைச்சர் இதுதொடர்பாக தனியாக ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அறிவுரைகளை வழங்கினார். அதனடிப்படையில் சிலை திருட்டை தடுத்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போனால் உடனடியாக கண்டறியும் வகையில் அவற்றிற்கு கியூஆர் கோடு பொருத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் சிலைத்தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து அந்த சிலை எங்குள்ளது என்பதை கண்டறிந்து மீட்டிடும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இன்னும் 6 மாத காலத்தில் அப்பணிகள் நிறைவுறும். அதேபோல மீட்கப்பட்ட சிலைகள் எந்த திருக்கோயிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவை நிரூபணம் ஆகும் நிலையில் அச்சிலைகளை அந்தந்த திருக்கோயில்களில் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த ஒரு திருக்கோயில் தொடர்பாக புகார்கள் வரப்பெற்றாலும் அதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள இந்து சமய அறநிலையச் சட்டம் வழிவகை செய்கிறது. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் துறை சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் கனகசபை மீதேறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என உத்தவிட்டது. இந்த அரசை பொறுத்தளவில் நீதிமன்றம் என்ன சொல்கின்றதோ, அதை என்று செயல்பட தயாராக இருக்கின்றது. நீதிக்கு தலைவணங்குகின்ற ஆட்சிதான் முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியாகும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பெ.வெற்றிக்குமார், உதவி ஆணையர் கே.சிவகுமார், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜேஸ்வரி ஸ்ரீதர், பரிதி இளம்சுருதி, திருக்கோயில் அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் சா.இராமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post புரசைவாக்கம் கங்காதரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா: பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார் அமைச்சர் சேகர்பாபு ..!! appeared first on Dinakaran.