ராணிப்பேட்டையில் பாமக பொதுக்கூட்டம்; பாலாற்றில் தோல் கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறிவிட்டது: அன்புமணி பேச்சு

ராணிப்பேட்டை, நவ.8: பாலாற்றில் தோல் கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறிவிட்டது என முத்துக்கடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேசினார். ராணிப்பேட்டை முத்துக்கடையில் மேற்கு மாவட்ட பாமக சார்பில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அரசியல் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு பாமக மேற்கு மாவட்ட செயலாளர் ப.சரவணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வேலு, என்.டி.சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ இளவழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, கிழக்கு மாவட்ட செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி வரவேற்றார். இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது: பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்டு இங்கு வெற்றி பெற்ற வேலு தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை இந்தியாவிற்கு நன்மை செய்துள்ளார். திண்டிவனம்- நகரி புதிய ரயில் பாதை திட்டத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை, பாதியில் நிற்கிறது. மாற்றம் முன்னேற்றம் கொண்டு வர துடிக்கும் எங்களை ஆதரிக்கவில்லை. ராணிப்பேட்டையில் குரோமிய கழிவுகளால் நிலத்தடி நீர் மாசடைந்து மாவட்டத்தில் கேன்சர், தோல் நோய் ஏற்பட்டு உள்ளது.

மதுக்கடைகளை மூடுவதற்கு 45 ஆண்டு காலமாக ராமதாஸ் போராடி வருகிறார். முதலமைச்சர் நினைத்தால் மதுக்கடைகளை மூட முடியும். உச்சநீதிமன்றம் மதுக்கடைகளை மூட மாநில அரசுகளிடம் உரிமைகள் உள்ளது என தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. அதன் பிறகு திமுக ஆட்சியில் 500 மது கடைகளை மூடினர். ஆனால் அதன் பிறகு மதுக்கடைகளை மூடுவதற்கு அவர்களுக்கு மனம் இல்லை. பாலாற்றில் தோல் கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறிவிட்டது. வாலாஜா முதல் வாணியம்பாடி வரை பாலாற்றை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் செய்தார் ராமதாஸ். குறிப்பாக பட்டியலின மக்கள், வன்னியர் இன மக்கள் ஒற்றுமையாக வாழ பல ஆண்டுகள் போராடி வருகிறார். இந்த இரு சமுதாயமும் சேர விடாமல் தடுக்கின்றனர். வட மாவட்டத்தில் அமைதியாக இருக்க காரணம் ராமதாஸ் தான் என இவர்களுக்கு தெரியவில்லை.

ஆன்லைன் மூலமாக பணம் மோசடியால் ஒவ்வொரு வருடமும் பலர் பாதிப்பு அடைகின்றனர். ஒரு ஆண்டுக்கு ₹5 ஆயிரம் கோடி வரை பணம் இழப்பு ஏற்படுகிறது. இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. பாலாற்றில் தடுப்பணை கட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளேன். பாலாறு தண்ணீர் சென்னை மக்கள் குடிக்கின்றனர். தென்பெண்ணை ஆறு பாலாற்றுடன் இணைத்தால் பாலாற்றிலும் தண்ணீர் வரும். வேலூர் மாவட்டம் மூன்றாக பிரித்ததற்கு காரணம் ராமதாஸ் தான். மாவட்டம் பிரிந்த பின்னர் மாவட்ட மருத்துவ கல்லூரி கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து பாமக வலியுறுத்தி வருகிறது. எங்களுக்கு ஐம்பது ஆண்டுகள் வேண்டாம் ஐந்து ஆண்டுகள் எங்களுக்கு போதும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். எங்களின் நோக்கம் அடுத்த தலைமுறையை நன்றாக வழி நடத்துவது தான். இவ்வாறு அவர் பேசினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் சபரிகிரிசன், பரத், விநாயகம், பாலாஜி, ரஜினிசக்கரவர்த்தி, பசுமைத்தாயகம் மாநில துணை செயலாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கஜேந்திரன், நகர செயலாளர்கள் செல்வம், ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ராணிப்பேட்டையில் பாமக பொதுக்கூட்டம்; பாலாற்றில் தோல் கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறிவிட்டது: அன்புமணி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: