×

குருபக்தி

‘‘வேறு எதையும் நினைக்காமல் எங்கும் என்னையே நினைத்து வழிபடும் மாறாத உறுதிகொண்ட பக்தர்களின் யோக க்ஷேமத்தை நான் தாங்குகிறேன்.’’

அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனாஹ் பர்யுபாசதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகா-க்ஷேமம் வஹாம்யஹம்

– என்று பகவத்கீதையில் பக்தியோகத்தில் திளைத்த பக்தர்களின் மேன்மையை எடுத்துக் காட்டுகிறார் பகவான்.

யோகம் என்பது கிடைக்காதது கிடைப்பது; க்ஷேமம் என்பது கிடைத்தது கைவிட்டுப் போகாதவாறு காப்பது. பாபாவின் பக்தர்களால் செல்லமாக ‘காகா’ என்றழைக்கப்படும் ஹரி சீதாராம் தீட்சித் கௌரவ நீதிபதியாகவும், பம்பாய் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் திகழ்ந்தவர். பாலகங்காதர திலகருக்கு விரோதமாக பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய வழக்கில் திலகர் சார்பில் வாதாடியவர் தீட்சித். திலகர் மீது வழக்குப் பதிவு செய்த சாண்டர்ஸ்ட் பிரபுவுக்கு நடந்த பிரிவுபசார நிகழ்ச்சியை எதிர்த்தவர் அவர் ஒருவரே. தீட்சித் இங்கிலாந்து சென்றபோது அங்கு நடந்த ஒரு விபத்தில் காலில் காயமடைந்து நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். அதனால் மனவிரக்தியில் இருந்தார். ஒரு சமயம் நானா சாந்தோர்க்கர் அவரைச் சந்தித்த பொழுது சீரடியிலுள்ள மகாபுருஷரான ஸ்ரீ சாயி பாபாவை அணுகினால் அவருக்கு குணம் கிடைக்கும் என்று கூறினார்.

சில நாட்கள் கழித்து அகமத்நகர் சென்ற போது ஸர்தார் காகா ஸாஹேப் மிரீகர் என்பவரைச் சந்தித்தார். அவரிடம் இருந்த ஸ்ரீ சாயிபாபாவின் பெரிய படத்தைப் பார்த்து தீட்சித் பாபாவை சந்திக்க வேண்டும் என்று ஆவல் கொண்டார். அப்போது பாபாவுடன் எப்பொழுதும் அருகிலிருந்து சேவை செய்யும் மாதவராவ் தேஷ்பாண்டே என்ற ஷாமாவிடம் தீட்சித்தை அறிமுகப்படுத்தி பாபாவிடம் அழைத்துச் செல்லும்படிக் கூறினார் மிரீகர்.

கால் குணமாகி நன்றாக நடக்க வேண்டும் என்று பாபாவிடம் வந்த தீட்சித் அதனை மறந்து, ‘உடலில் ஏற்பட்டுள்ள முடம் ஒரு பொருட்டல்ல; ஆன்மாவின் முடம் குணமாக வேண்டும்’ என்ற உயர்ந்த நோக்கத்தை பாபாவின் தரிசனத்தால் பெற்றார். இதனால் அடிக்கடி சீரடி சென்று பாபாவை தரிசனம் செய்து வந்தார். அவருடைய மனம் பாபாவிடம் முழுமையாக ஈடுபட்டுவிட்டதால், அவரால் தொடர்ந்து பம்பாயில் இருக்க முடியவில்லை. இதனால் அவருடைய வருவாயும் குறைந்தது. அவருடைய நண்பர்கள் அவரின் இந்தப் போக்கைக் கண்டு, `சீரடியிலுள்ள சாயிபாபா என்ற பக்கிரி அவரை மயக்கி, சீரடிக்கு அழைத்து, அவரைப் பித்தனாக்கி விட்டார்’ என்று பேசிக் கொண்டனர்.

என்னிடம் வந்துவிட்ட உன்னையும் உன் குடும்ப நலனையும் காப்பது என் பொறுப்பு என்பதை பாபா உறுதியாகக் கூறினார். ‘காகா உமக்கு ஏன் கவலையும் பொறுப்பும்? எல்லா பொறுப்புகளும் என்னுடையவை’ (காகா துலா கால்கி கஸ்லி மலா ஸாரா கல்ஜி ஆஹே) என்று பாபா தீட்சித்துக்கு அருளிய விசேஷ வாக்கு. கால தேச வர்த்தமானங்களுக்கு கட்டுப்படாததும் மிகப் பரந்ததுமான இத்திருமொழி, பகவான் அருளிய பகவத்கீதையின் தெய்வீக மொழி போல எவ்வளவு சத்தியமானது என்பதை பாபா காகாவின் வாழ்வில் பலமுறை செயல்படுத்திக் காட்டியுள்ளார்.

அதனால் பாபாவின் சக்திகளும் இயல்பும் தெய்வீகமானவை என்பதை தீட்சித்தால் ஒரு போதும் மறுக்க முடியவில்லை. தமக்கு வேண்டிய உலக அலுவல்களை கவனிக்காமல் சீரடி பாபாவே தஞ்சமென்று அடைந்ததால் உயர்ந்த சமூக, அரசியல் பதவிகளையும், கௌரவங்களையும் இழக்க நேரிட்டும் அவர் உள்ளத்தில் எந்தவித பயமோ, கவலையோ, வருத்தமோ இல்லாமல் இருந்தார். சுகத்தைப் பொருளோடும், சுக போகங்களை சந்தோஷத்துடனும் இணைக்கும் உலக வாழ்வின் குழப்பங்களை விடுத்து ஸத்குருவால் மிக உயர்ந்ததான ஏதோ ஒன்றை அடைய பயிற்சியளிக்கப்படுவதை பாபாவிடம் அவர் உணர்ந்தார்.

பாபாவின் அருளால் ஸ்ரீமத்பாகவதம், பாவார்த்த ராமாயணம் முதலிய நூல்களைப் பாராயணம் செய்த தீட்சித்தின் வைராக்கியம் வேரூன்றி நின்றது. பாபா சொல்லாலும், செயலாலும் படிப்பினையூட்டும் பரமகுரு அல்லவா? ஒருநாள் தாம் சுதேச ஸமஸ்தானத்தில் சம்பாதித்த ஆயிரத்துக்கு மேலான ரூபாய்களை (இக்கால மதிப்பு மிக உயர்ந்தது) ஒரு பெட்டியில் எடுத்து வந்து அப்பெட்டியை பாபாவின் முன் வைத்து, ‘பாபா இவை யாவும் தங்களுடையதே’ என்றார். ‘அப்படியா’ என்று கேட்டுக் கொண்டே, பாபா தம் இரு கரங்களாலும் அந்த ரூபாய்களை அங்குள்ளவர்களிடம் வாரி வழங்கிவிட்டார். அதைக் கண்ட தீட்சித் எவ்வித சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். உலகில் வெகுவாக மதிக்கப்படும் பொன், ஸத்குருவைப் பொறுத்த வரையில் வெறும் மண்தான் என்பதை உணர்ந்து தீட்சித், “ஸம லோஷ்டாச்ம காஞ்சன:’’

(ஸமம் – ஒன்றாகப் பார்த்தல்; லோஷ்டம் – மண்; அச்மம் – கல்; காஞ்சனம் – பொன்) என்ற உயர்ந்த திட வைராக்கியத்தைப் பெற்றுவிட்டார்.காலரா பரவிய சமயம், சீரடி மக்கள் அந்நோய் பரவாமல் தடுப்பதற்கு இரண்டு கட்டளைகளை ஏற்படுத்தினர். ஒன்று; எவ்வித எரிபொருள் (விறகு) வண்டியும் கிராமத்திற்குள் நுழையக் கூடாது. இரண்டு; அங்கு ஓர் ஆடுகூட கொல்லப்படக் கூடாது. ஆனால், எந்தவொரு ஆபத்திலிருந்தும் சீரடியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பாபா இக்கட்டளைகளை லட்சியம் செய்யவில்லை. அச்சமயத்தில் சீரடியில் நுழைந்த விறகு வண்டியை கிராம மக்கள் விரட்டியடிப்பதைத் தெரிந்து கொண்ட பாபா, விறகுகளை வாங்கி மசூதியில் அடுக்கச் சொன்னார். சில நாட்களில் சீரடியிலுள்ள ஏழை மக்கள் தங்கள் உபயோகத்திற்கு விறகுகளை எடுத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது கட்டளை ஓர் ஆடுகூட கொல்லப்படக் கூடாது என்பதாகும். அக்கட்டளை பாபாவினால் எங்ஙனம் செயல் படுத்தப்பட்டது என்பதைக் காணலாம். யாரோ ஒருவர், மெலிந்து சாகும் தருவாயில் இருக்கும் வயதான ஆட்டை மசூதிக்குக் கொண்டு வந்தார். அப்பொழுது மாலிகானைச் சேர்ந்த ஃபக்கீர் பீர் முகம்மது என்ற படேபாபா, பாபாவின் பக்கத்தில் இருந்தார். படேபாபா பாபாவால் மிகவும் மதிக்கப்பட்டவர். எப்போதும் பாபாவின் வலது பக்கத்திலே உட்காந்திருப்பவர்.

ஹூக்காவை அவர் முதலில் குடித்த பிறகு தான் பாபா அதை எடுத்துக் கொள்வார். அவர் இல்லாமல் பாபா சாப்பிடக் கூட மாட்டார். ஒரு தீபாவளிப் பண்டிகையன்று காலை அனைத்து பக்தர்களுக்கும் விருந்து பரிமாறப்பட்டது. பக்தர்கள் அனைவரும் சாப்பிடத் தொடங்கும் முன்பு படேபாபாவைக் காணவில்லை. அந்நேரத்தில் படேபாபா எதற்கோ கோபித்துக் கொண்டு சென்று விட்டார். பக்தர்கள் படேபாபாவை தேடிக் கண்டுபிடித்து கூட்டி வந்து பந்தியில் உட்கார வைத்த பிறகு தான் பாபா சாப்பிட ஆரம்பித்தார். ஒவ்வொரு நாளும் பாபா தமக்குக் கிடைக்கும் தட்சிணையிலிருந்து ஐம்பது ரூபாயை படேபாபாவிற்கு தினமும் கொடுத்து வந்தார். அவர் நடந்து போகும் போது பாபாவும் சில அடி தூரம் வரை நடந்து செல்வார்.

அவரை பாபா அழைத்து, ‘ஒரே வீச்சில் இந்த ஆட்டை வெட்டி விடு’ என்று கூறினார். பாபா அந்த ஆட்டைக் கருணையுடன் பார்த்து ‘எதற்கும் பயனின்றி அது ஏன் கொல்லப்பட வேண்டும்’ என்று சாக்கு சொல்லிவிட்டு மசூதியை விட்டுப் போய்விட்டார். அங்கேயே இருக்கும் மாதவராவ் தேஷ்பாண்டே என்ற ஷாமாவிடம் ‘ஷாமா நீயாவது போய் கத்தி ஒன்றைக் கொண்டு வா. இந்த ஆட்டை வெட்ட வேண்டும்’ என்று கட்டளையிட்டார். ஷாமா ராதாகிருஷ்ணமாயியிடம் சென்று கத்தியைக் கொண்டு வந்தார். ஆனால், எதற்காக ஷாமா கத்தி வாங்கினார் என்று தெரிந்தவுடன், ராதாகிருஷ்ணமாயி கத்தியை திருப்பி எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார். ஷாமா வீட்டிலிருந்து கத்தி கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றவர் திரும்பி வரவே இல்லை.

பாபா பக்தர்களில் காகா தீட்சித் `அபரஞ்சி தங்கம்’ என்று பாபாவிற்குத் தெரிந்திருந்தாலும் அதைப் புடம் போடாமல் தங்கம் என்று ஏற்பதற்கு இல்லை. வைரம் தன் மதிப்பைப் பெறுவதற்கு பட்டை தீட்டப்பட வேண்டும். உளியின் அடி விழாமல் கல்லிற்குத் தெய்வத்தன்மை கிடைத்து விடுவதில்லை.பிறகு பாபா காகா தீட்சித்தைக் கூப்பிட்டு, “நீ ஒரு கத்தியைக் கொண்டு வந்து இந்த ஆட்டை வெட்டிவிடு’’ என்றார். தீட்சித் சாதேவின் வாதாவிற்குச் சென்று ஒரு கத்தியுடன் திரும்பி வந்தார். முகம்மதியரான படேபாபா அதைக் கொல்வதற்கு விருப்பமற்றவராய் இருப்பதையும், பிராமணக் குடும்பத்தில் பிறந்த தீட்சித் அதைக் கொல்வதற்கு ஆயத்தமாக இருந்ததைக் கண்டு மக்கள் அதிசயமடைந்தனர்.

தம் வேட்டியை மடித்து இறுக்கிக் கட்டிக் கொண்டு, கத்தியைத் தூக்கிப் பிடித்து பாபாவின் அனுமதிக்காக கொஞ்சம் தயக்கத்துடன் காத்திருந்தார் தீட்சித். “ஏன் தயக்கம், உம்! வெட்டு’’ என்றார் பாபா. தீட்சித் கத்தியைத் தூக்கி ஆட்டைவெட்டப் போகும் சமயத்தில், “நிறுத்து! நீ எவ்வளவு கொடுமையானவனாய் இருக்கிறாய்! பிராமணனாயிருந்து கொண்டு ஆட்டைக் கொல்கிறாய்’’ என்றார். கத்தியைக் கீழே வைத்துவிட்டு தீட்சித் பேசினார்:

“அமிர்தத்தையொத்த தங்கள் சொல் எங்களுக்குச் சட்டமாகும். எங்களுக்கு வேறு எந்த விதச் சட்டமும் தெரியாது. எப்போதும் தங்களையே நினைவு கூர்கிறோம். தங்கள் ரூபத்தையே தியானிக்கிறோம். இரவும் பகலும் தங்களுக்கே கீழ்ப்படிகின்றோம். கொல்வது சரியா, தப்பா என்பது எங்களுக்குத் தெரியாது. அதை நாங்கள் நினைக்கவே இல்லை. ஒவ்வொன்றுக்கும் காரணத்தை ஆராயவோ, விவாதிக்கவோ நாங்கள் விரும்புவதில்லை. குருவின் கட்டளைகளை ஐயப்படாமல் உறுதியாகச் செயல்படுத்தும் பண்புடன் நடத்தலே எங்களது கடமையும் தருமமும் ஆகும்’’.

பின்னர் பாபா தீட்சித்திடம், ஆட்டை தாமே பலி கொடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னார். தாகியா என்ற இடத்திற்கு அந்த ஆடு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் வழியிலேயே இறந்து விழுந்தது. இமயமலையில் தன் சீடர்களுடன் இருந்த பாபாஜியிடம் ஒரு மனிதன் வந்து, `நான் தங்களைத் தான் தேடிக் கொண்டிருந்தேன். தயைசெய்து என்னைத் தங்கள் சீடனாக்கிக் கொள்ள வேண்டுகிறேன்’ என்று கூறினான். மகாகுரு பதில் ஏதும் சொல்லாமல் இருக்கவே, ‘நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளாவிடில் நான் இந்த மலையிலிருந்து குதித்து விடுவேன். கடவுளை அடையத் தங்கள் வழிகாட்டுதல் இல்லையெனில் நான் வாழ்ந்து பயனில்லை’ என்றான்.

‘‘அப்படியானால் குதி. தற்போதைய நிலையில் நான் உன்னை ஏற்க முடியாது’’ என்று பாபாஜி எவ்வித சலனமுமின்றிக் கூறினார். அம்மனிதன் அப்பொழுதே அந்தப் பாறையின் மேலிருந்து குதித்து விட்டான். பாபாஜி சீடர்களிடம் அவனின் சிதைந்த உடலைக் கொண்டுவரும்படிக் கூறி, அவ்வுடலின் மீது கையை வைத்தார். அதிசயம்! அவன் எழுந்து மகாகுருவைப் பணிந்து வணங்கினான். “நீ இப்போது என் சீடனாகத் தயாராக உள்ளாய்’’ என்று உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை நோக்கி அன்பாகக் கூறினார். “நீ பரீட்சையில் தேறி விட்டாய். நீயும் எங்கள் குழுவில் ஒருவன்’’ என்று ஆசிர்வதித்தார்.

இங்கு ஆத்ம ஒளி பெற்ற குருதேவர் ‘குதி’ என்று கூறியவுடன் அம்மனிதன் கீழ்ப்படிந்தான். இதன் மூலம் அவன் குருவிடம் கொண்ட நம்பிக்கையையும் உறுதியையும் மெய்ப்பித்துக் காட்டினான். இது அசாதரணமானதாக இருந்தாலும், இப்பரீட்சை அந்த சூழ்நிலைக்கு உகந்தது என்பதை குருவே அறிவார். இதனைத் தன்னை அழித்து குருவில் ஒன்றுதல், ஃபனா ஃபிஷ்ஷைஹ் (fana fish-shayakh) என்று சூஃபி தத்துவம் குறிப்பிடும். அதன் பின் ரஸூலில் ஒன்றுதல், ஃபனா ஃபிர்ரஸூல் (fana fi-rasul) இறைவனில் ஒன்றுதல், ஃபனா ஃபில்லாஹ் (fana fi-llah) என்ற இந்த இரண்டு நிலைகளும் குருவின் மூலமே பெறப்படும்.

அன்பால் மட்டுமே அத்யாத்ம வாழ்க்கையில் முன்னேற முடியும்.நாம் அன்பால் குருவைச் சரணடைய நினைக்கும் போது அறிவு அதைத் தடுத்து கேள்வி கேட்கும். ஆனால், அப்போது அந்த அறிவை மீறி நம் தலையை குருவின் பாதங்களில் வைத்து, சரணடைந்து நம்மை நாமே மறந்துவிட வேண்டும். குருவின் உபதேசத்தை இதயத்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும். “நீ உன் தலையை வெட்டி எறிவதாக இருந்தால் என்னுடன் வா’’ (If you can cut off your head and put it on the ground, come with me) என்பது கபீர் வாக்கு. இங்கு தலை என்பது நாம் பெற்ற அறிவையும் அகங்காரத்தையும் குறிக்கும்.

ஸ்ரீ சாயி சத்சரிதம் எழுதிய ஹேமத்பந்த் குருவின் சீடர்களை மூன்றுவிதமாகப் பாகுபடுத்துகிறார். முதல் தரமானவர்கள் குரு என்ன விரும்புகிறார் என்பதை ஊகித்தறிந்து உத்தரவு வரும் வரை காத்திராமல் அவர்களுக்கு சேவை செய்கிறார்கள். இரண்டாம் தரமானவர்கள் தங்களது குருவின் கட்டளையை அட்சர சுத்தமாக சிறிதும் தாமதமின்றி கீழ்ப் படிகிறார்கள். மூன்றாம் தரமானவர்கள் குருவின் கட்டளையை நிறைவேற்றாமல் ஒத்தி வைத்துக் கொண்டு ஒவ்வொரு படியிலும் தவறு செய்கிறார்கள்.

‘‘சொல்லாமலே பெரியர் சொல்லிச் சிறியர் செய்வர்
சொல்லியும் செய்யார் கயவரே – நல்ல
குலாமாலை வேற் கண்ணாய்! கூறுவமை நாடின்
பலாமாவைப் பாதிரியைப் பார்’’
எனும் ஔவைப் பிராட்டியின்நீதி வெண்பா இங்கு நினைக்கத் தக்கது.

பூவாமலே காய்த்து பழம் தரும் பலா மரம் போல, குருவின் கட்டளையைச் சொல்லாமலே செய்பவர் சீடர்களுள் தலையானவர். பூத்தும் காய்த்தும் பழம் தரும் மாமரத்தைப் போல சொல்லிச் செய்பவர் இரண்டாம் தரமானவர்கள். பூத்துக் காய்க்காமலும் பழம் தராமலும் இருக்கும் பாதிரி போல சொல்லிவிட்டு ஒன்றும் செய்யாமலே இருப்பவர் மூன்றாம் தரமானவர்கள். இங்கே ஔவை வாக்கே, குரு வாக்காக அமைகிறது.குருபக்தியின் மேன்மையையும், நன்மையையும் காகா ஸாஹேப் தீட்சித் மூலம் நமக்கு எடுத்துக் காட்டிய பாபாவின் திருவடிகளை சரணம் செய்வோம்.

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்

The post குருபக்தி appeared first on Dinakaran.

Tags : Kurupakti ,Ananyash Sindhyanto ,Ye ,Janah Paryubasate ,Desham ,
× RELATED கம்பம் நகராட்சி சார்பில் தெருக்கூத்து தூய்மை விழிப்புணர்வு