டெல் அவிவ்: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை பதவிநீக்கம் செய்ததை கண்டித்து, பிரதமருக்கு எதிராக வன்முறை வெடித்தது. தீ வைப்பு, சாலை மறியல், கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதற்றம் நிலவுகிறது. காசா, லெபனான், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கடந்த ஓராண்டுக்கு மேலாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்தநிலையில் திடீரென இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவாவ் கலான்டை அந்தப் பதவியிலிருந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நீக்கியுள்ளார். அந்தப் பதவிக்கு வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்த கிடியன் சார் என்பவர், நாட்டின் வெளியுறவு அமைச்சராகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சியில் யோவாவ் கலான்ட் இடம்பெற்றபோதிலும், இருவருக்கும் இடையே காசா, லெபனான், ஈரான் போர் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வந்ததால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை கண்டித்து, தலைநகர் டெல்அவிவ் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பொதுமக்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசினர்.ஜெருசலேமில் உள்ள பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்திற்கு அருகேயும் போராட்டங்கள் நடந்தன.
போராட்டக்காரர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர்களில் சிலரை போலீசார் கைது செய்தனர். டெல் அவிவில் வன்முறையில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
The post பாதுகாப்பு அமைச்சர் டிஸ்மிஸ் எதிரொலி: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் வன்முறை வெடித்தது appeared first on Dinakaran.