×
Saravana Stores

கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு விலக்கு; 35 ஆண்டாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு முதல்வரால் நிம்மதி: விடுவிப்பு ஆணை பெற்றவர்கள் நெகிழ்ச்சி


கோவை: கோவை பீளமேட்டில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நில எடுப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினார். மேடையில் 10 பேருக்கு நில விடுவிப்பு உத்தரவு வழங்கப்பட்டது. விழாவில் 300 பயனாளிகள் பங்கேற்று விடுவிப்பு உத்தரவு பெற்றனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் இடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தின் திட்டப்பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த திட்டப்பணிகளும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பொதுமக்கள் எந்த தடையும் இன்றி பயன்படுத்தும் வகையில் விடுவிப்பு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.

விடுவிப்பு ஆணை பெற்ற பயனாளிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். கணபதி, விளாங்குறிச்சி, வீரகேரளம், தெலுங்குபாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குமாரபாளையம், காளப்பட்டி, உப்பிலிபாளையம் என 9 கிராமங்களை சேர்ந்த 5,338 பயனாளிகளுக்கு சொந்தமான 468 ஏக்கர் பரப்பிலான நிலத்தை வீட்டு வசதி வாரியம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கடந்த 1981ல் இருந்து பல்வேறு காலகட்டங்களில் இந்த நிலங்கள் வீட்டு வசதி வாரியத்தால் பல்வேறு திட்டப்பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. தமிழ்நாடு அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தற்போது இந்த நிலங்களுக்கான தடை நீக்கப்பட்டு உரிய பயனாளிகள் முழுமையாக பயன்படுத்த விடுவிப்பு ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்ட அளவில் 5,338 பயனாளிகளின் 468 ஏக்கர் நிலங்களுக்கான தடை நீக்கப்பட்டு விடுவிப்பு ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விடுவிப்பு ஆணை பெற்ற பயனாளிகளில் ஒருவரான கணபதியை சேர்ந்த தமிழரசி கூறுகையில், ‘‘கடந்த 35 ஆண்டிற்கு மேலாக நில எடுப்பு தடையின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தோம். முதல்வரின் உத்தரவால் எங்களுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. கடந்த காலங்களில் கூட்டு பட்டாதான் பெற முடிந்தது. வங்கிக்கடன் பெற முடியாத நிலையில் இருந்தோம். இப்போது தனி பட்டா மற்றும் வங்கிக்கடன் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது’’ என்றார். சிவக்குமார் கூறுகையில், ‘‘தனி நபரிடம் நிலம் வாங்கினோம். அந்த இடத்தை பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது. நாங்கள் ஏற்கனவே அந்த இடத்தில் வீடு கட்டி விட்டோம். நிலத்தை விற்பனை செய்ய, வங்கி கடன் பெற முடியாத சூழல் இருந்தது. இந்த நிலையில் முதல்வர் உத்தரவின் பேரில் நில எடுப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கு தரப்பட்டதால் நிம்மதி ஏற்பட்டது.

35 ஆண்டிற்கு மேலாக காத்திருந்து கவலையில் இருந்தோம். இப்போதுதான் எந்த தடையும் இல்லாத நிலம் என்ற நிம்மதியான நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.. இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமி கூறும்போது, ‘‘மாநில அளவில் 2002 ஏக்கர் நிலம் வீட்டு வசதி வாரிய கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த நிலங்களுக்கான விடுவிப்பு ஆணைகள் விரைவில் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும். கோவை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நில விடுவிப்பு உத்தரவு வழங்கப்படவுள்ளது. பொதுமக்களுக்காக 16 இடத்தில் புகார் பெட்டி வைத்து மனுக்களை பெற்றோம். சுமார் 5 ஆயிரம் புகார் மனுக்கள்தான் வந்தது. கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் வாங்கிய பயனாளிகள் பிரச்னைகளை கேட்ட முதல்வர் 3 மணி நேர ஆய்வு நடவடிக்கையால் உடனடியாக பயனாளிகள் நிவாரணம் பெற உத்தரவிட்டார். இனி யாரும் இடம் வாங்கிய மக்கள் கஷ்டப்படக்கூடாது என அவர் கூறினார்.

அவரால்தான் இவ்வளவு பேர் நிலம் விடுவிப்பு ஆணை பெற முடிந்தது. 2,500 சதுர அடி முதல் 3,500 சதுர அடி வரை கட்டிடம் கட்ட இனி அலுவலகம் சென்று கஷ்டப்பட வேண்டியதில்லை. உரிய விதிமுறைப்படி இந்த அளவில் கட்டிடம் கட்டலாம் என அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

35 ஆண்டுகளில் முடியாததை 3 மணி ேநரத்தில் முடித்த முதல்வர்
தமிழக அரசு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 12.30 மணியளவில் – கள ஆய்வில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் பலரும் அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணைகள் பிறப்பித்தார். முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த கோவை வடக்கு, தெற்கு மற்றும் பேரூர் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள 468.89 ஏக்கர் நிலங்களுக்கு நில எடுப்பிலிருந்து விலக்களித்து அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார். இதன்மூலம் 35 ஆண்டுகால பிரச்னைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 மணி நேர கோவை மாவட்ட ஆய்வு மூலம் தீர்வு கண்டு சாதனை படைத்துள்ளார்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு விலக்கு; 35 ஆண்டாக பாதிக்கப்பட்ட எங்களுக்கு முதல்வரால் நிம்மதி: விடுவிப்பு ஆணை பெற்றவர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Goa ,KOWAI ,PELAMET ,Tamil ,Nadu ,Chief Mu. K. Emancipation ,Stalin ,Dinakaran ,
× RELATED கோவையில் செவிலியர்களை படம் எடுத்த காவலர் சஸ்பெண்ட்..!