சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட் சிறப்பு கல்வி படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தொலைத்தூர கல்வியில் சிறப்பு கல்வி மற்றும் மறுவாழ்வு துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் கீழ் பி.எட்., சிறப்பு கல்வி கல்வியியல் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசின் மறுவாழ்வு கவுன்சில் அனுமதியும், உயர்கல்வித் துறையின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணினி அறிவியல், வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களில் வழங்கப்படுகிறது.
பி.எட் சிறப்பு கல்வி படிப்பு 4 செமஸ்டர்கள் கொண்டு 2 வருடங்கள் படிப்பு மற்றும் 5 செமஸ்டர்கள் கொண்டு 2.5 வருடங்கள் படிப்பு வழங்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வியில் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும். இந்நிலையில், பி.எட். சிறப்பு கல்வி படிப்புக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக அப்பல்கலைக் கழகத்தின் பதிவாளர் செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி வாயிலாக பி.எட். (சிறப்பு கல்வி) படிப்பை வழங்கி வருகிறது.
ஒன்றிய அரசின் மறுவாழ்வு கவுன்சில் அனுமதியுடன் நடத்தப்படும் இப்படிப்பு, பி.எட். (பொது) படிப்புக்கு இணையானது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இப்படிப்புக்கு நுழைவுத்தோ்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 2025ம் ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வருகிற டிசம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு டிச. 1ம் தேதிக்குள் www.tnou.ac.in என்ற இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு முடிவு மற்றும் கட் ஆப் மதிப்பெண் டிச. 23ம் தேதி வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பி.எட் சிறப்பு கல்வி படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.