பிரபல நடிகர் நிவின் பாலி மீது பெண் அளித்த பாலியல் புகார்: நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என போலீசார் அறிக்கை

கேரளா: மலையாள நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் புகார் பொய்யானது என போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொத்தமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் ஊனுக்கல் போலீசார் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் தகவல் தெரியவந்தது. பாலியல் குற்றச்சாட்டில் நிவின் பாலிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று ஊனுக்கல் போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். பாலியல் அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் இடத்தில் நடிகர் நிவின் பாலி இல்லை என்று போலீஸ் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிரபல மலையாள இளம் நடிகர் நிவின் பாலி, தயாரிப்பாளர் சுனில் உள்பட 5 பேர் துபாயிலுள்ள ஓட்டலில் வைத்து கடந்த வருடம் தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாக எர்ணாகுளம் நேரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் போலீசில் புகார் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகர் நிவின் பாலி உள்பட 5 பேர் மீது எர்ணாகுளம் ஊன்னுகல் போலீசார் கூட்டு பலாத்காரம் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால் புகார் கொடுத்த இளம்பெண் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், இது பொய்யான வழக்கு என்றும் நடிகர் நிவின் பாலி கூறினார். மேலும் பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய கடந்த வருடம் டிசம்பர் 14 முதல் 16ம் தேதி வரை நிவின் பாலி தங்களுடன் படப்பிடிப்பில் இருந்ததாக டைரக்டர்கள் வினீத் னிவாசன் மற்றும் அருண் ஆகியோர் கூறினர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியான், டிஜிபி மற்றும் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு நிவின் பாலி ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், “தன்மீது பொய்யான புகார் சுமத்தப்பட்டுள்ளது.

துபாயில் வைத்து பலாத்காரம் நடந்ததாக இளம்பெண் கூறிய நாட்களில் நான் கேரளாவில் தான் இருந்தேன். எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. வெளிநாடு செல்லவில்லை என்பதை நிரூபிப்பதற்கான பாஸ்போர்ட் ஆவணங்களையும் இணைத்துள்ளேன். என் மீது கூறப்பட்டுள்ள புகாரில் சதித்திட்டம் உள்ளது. இதை விசாரித்து வெளியே கொண்டு வர வேண்டும். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறேன். எனவே என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், நிவின் பாலி சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் தேதியில் நிவின் பாலி தன்னுடன் வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பில் இருந்ததாக தெரிவித்தார். மேலும் நடிகை பார்வதி கிருஷ்ணா மற்றும் பகத் மானுவெல் ஆகியோர் வர்ஷங்களுக்கு ஷேஷம் படப்பிடிப்பில் நிவின் பாலி தங்களுடன் இருந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு ஆதரவாக பேசியிருந்தனர். இதனை அடுத்து புகார் கூறிய பெண்ணிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக எர்ணாகுளம் கொத்தமங்கலம் நீதிமன்றத்தில் டி.ஒய்.எஸ்.பி. அறிக்கை சமர்பித்தார். அதில் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த பெண் சொல்லப்படும் தேதி மற்றும் இடத்தில் நிவின் பாலி இல்லை என்பது தெரியவந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிவின் பாலியின் பெயர் 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிவின் பாலி தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவரின் அன்புக்கும், பிராத்தனைக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post பிரபல நடிகர் நிவின் பாலி மீது பெண் அளித்த பாலியல் புகார்: நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என போலீசார் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: