×

செயற்கை மார்பகம் தயாரிப்பில் பெண் தன்னார்வலர்கள்

நன்றி குங்குமம் தோழி

‘சாய்ஷா இந்தியா’ என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, உலகம் முழுவதும் பெண் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து செயல்படுகிற தொண்டு நிறுவனம். சுருக்கமாக, “பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அர்த்தமுள்ள வாழ்க்கை” என்பதைக் குறிக்கும் சொல். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெயஸ்ரீ ரத்தன்- குமார் ரத்தன் இணையர்களால் 2009ல் மும்பையில் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 5 தோழிகள் மட்டுமே இதில் இணைய, இன்று உலகம் முழுவதும் கிட்டதட்ட 500 பெண் தன்னார்வலர்கள் இதில் இருக்கிறார்கள்.

இதில் தங்களை இணைத்துக்கொள்ளும் பெண்கள், கேன்சர் சர்வைவருக்கு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் இணைபவர்கள். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், வங்கிப் பணியாளர்கள் என பல்வேறு துறை சார்ந்த பெண்களும் தன்னார்வலர்களாக இதில் இருக்கிறார்கள் என பேச ஆரம்பித்தவர் தலைமை நிர்வாகியான ஜெயஸ்ரீ ரத்தன்.
‘‘ஒரு பெண்ணை பெண்ணாக அடையாளப்படுத்துவதே அவளின் மார்பகம்தான். செக்ஸ் சிம்பளாகவும், தாய்மையின் அடையாளமாகவும் இருக்கும் மார்பகத்தில் ஒன்றை இழந்துவிட்டால் அந்தப் பெண்ணின் நிலை…? மற்ற கேன்சர் பாதிப்புகள் சொன்னால் மட்டுமே வெளியில் தெரியும். ஆனால் பிரெஸ்ட் கேன்சர் சொல்லாமலே தெரிந்துவிடும்.

சென்னையில் மருத்துவர் ஒருவரின் அழைப்பில் கேன்சர் சர்வைவர் மீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு தமிழ் புரொபசரின் அறிமுகம் கிடைத்தது. ‘சர்ஜரி செய்து நீக்கப்பட்ட மார்பகத்தை நீ பார்த்திருக்கியா? ஒற்றை மார்பை இழந்த அந்தப் பகுதி எப்படி இருக்கும்’ தெரியுமா? என கேள்வி மேல் கேள்வியாக என்னிடம் கேட்டார். நான் எல்லாவற்றிற்கும் ‘இல்லை. தெரியாது. பார்த்ததில்லை’ என்றே பதில் சொன்னேன். ‘சரி வா என்னை கட்டி அணைத்துப் பார். உனக்குப் புரியும்’ என்றார். அவரை ஹக் பண்ணிய போதுதான் மார்பக இழப்பின் இடைவெளியையும், வலியையும் என்னால் உணர முடிந்தது.

14 வயது பெண் குழந்தையில் தொடங்கி 20, 30 வயது இளம் பெண்கள், 50 வயதைக் கடந்த பெண்கள் வரை மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தங்கள் மார்பகத்தில் ஒன்றை இழந்த பிறகு வீட்டைவிட்டு வெளியில் வர தயங்கி வீட்டிற்குள்ளேயே அடைபடுகிறார்கள். காரணம், ஒரு மார்பகத்தை இழந்த நிலையில் இவர்களுக்கு பிரெஸ்ட் பேலன்ஸ் இருக்காது. சேலை,
சுடிதார், டிஷர்ட் போன்ற உடைகளை அணியும்போது, இவர்கள் மார்பகப் பகுதியின் ஒரு பக்கம் ஃப்ளாட்டாகத் தெரியும்.

Mastectomy என்பதை வீட்டுக்குள்ளேயே யாரும் பேசாத போது இதை நாம் யாரிடம் எப்படி பேசுவது. நான் இங்கே சொல்ல வருவது சென்ஸிடிவான விஷயம். கேன்சரால் மார்பகத்தை இழந்த ஒரு அம்மாவிடம் ‘நீங்கள் என்ன பண்றீங்க’ எனக் கேட்டேன். ‘கைக்குட்டையை சுருட்டி உள்ள வைப்பேன்’ என்றார். வேறு சிலர் ‘நியூஸ்பேப்பர்’ என்றார்கள். நொந்துவிட்டேன். அவர்களுக்கெல்லாம் காட்டன் நூலால் நிட்டிங் செய்யப்பட்ட நாக்கர்ஸ்களை (Knitted knockers) கொடுக்கத் தொடங்கினேன்.

பயன்படுத்தியவர்களிடம் இருந்து கண்ணீர்தான் பதில் எனக்கு. ‘ரொம்ப நல்லா இருக்குமா… பயன்படுத்துவதே தெரியவில்லை. ஃபிட்டாக நல்ல ஃபீல் தருது. எல்லோருக்கும் இதைப் பண்ணிக் கொடுக்கலாமே’ என்றார்கள். இப்போது அவர்களையும் இதில் தன்னார்வலராகக் கொண்டு வந்திருக்கிறேன்…’’ புன்னகைக்கிறார் ஜெயஸ்ரீ ரத்தன்.

‘‘மார்பகத்தை இழந்தவர்களுக்காகவே, சாய்ஷா இந்தியா வழியாக பெண் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து, செயற்கை முறையில் நிட்டிங் மற்றும் குரோஷே முறையை பயன்படுத்தி செயற்கை மார்பகங்களை உருவாக்கித் தருகிறோம்’’ என்றவர், ‘‘மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மார்பகத்தை இழந்தவர்கள் இதனை தங்கள் பிராவுக்குள் வைத்து அணிந்து கொள்ளலாம்’’ என்றவாறு மேலும் விளக்க ஆரம்பித்தார்.

‘‘ஆரம்பத்தில் எங்கள் தயாரிப்புகள் ஒரே மாதிரியாக இல்லை. ஆனால் 100 தன்னார்வலர்கள் இணைந்த பிறகு இணைய வழியில் டிரெயினிங் நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கி முறையான பயிற்சி வழங்கி, நாக்கர்ஸ் தயாரிப்புக்கான அளவு சாட்களை உருவாக்கி, ஏ,பி,சி,டி,இ வரை கப் சைஸ்களை தயாரித்தோம். இந்த நாக்கர்ஸ் முழுக்க முழுக்க ஒரிஜினல் மெர்சிடிஸ் காட்டன் நூலால் (mercerised cotton yarn) தயாராகிறது.

காட்டன் நூல் கிடைப்பது கொஞ்சம் கடினம் என்றாலும், இரண்டு, மூன்று நிறுவனங்களை நாங்கள் இதற்கென கண்டுபிடித்து வைத்திருக்கிறோம். அவர்களிடம் இருந்து எங்கள் தன்னார்வலர்கள் நூல்களை விலைகொடுத்து அவர்களே வாங்கிக் கொள்கிறார்கள். முக்கோண வடிவில் தயாராகும் நாக்கர்ஸ் உள்பகுதியில், பஞ்சு போன்ற மென்மையான ஃபைபர்
ஃபில்லிங் (polififble) வைத்து அடைக்கப்படும்.

இதுவரை 20 ஆயிரம் நாக்கர்ஸ்களை கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா என பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகித்திருக்கிறோம். தன்னார்வலர்களுக்கு ‘இத்தனை நீ செய்துதர வேண்டும்’ என்கிற டார்கெட்களை நான் கொடுப்பதே இல்லை. தங்கள் பணிகளுக்கு நடுவே வாரத்தில் 4 நாக்கர்ஸ் மட்டுமே தயாரிக்க முடிந்தாலும் அது மார்பகத்தை
இழந்த 2 நோயாளிகளுக்கு வாழ்க்கை, அவ்வளவுதான்.

எங்கள் தன்னார்வலர்கள் அபுதாபி, துபாய், மஸ்கட், குவைத், ஓமன், சிங்கப்பூர், யுஎஸ் நாடுகளில் இருந்தெல்லாம் நாக்கர்ஸ்களை மல்டி கலரில், மல்டிபிள் சைஸில் உருவாக்கி, போஸ்டல் வழியாக மும்பை அல்லது சென்னை கலெக் ஷ்ன் சென்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். பிறகு ஃபைபர் பில்லிங் செய்யப்பட்டு தேவைப்படுகிற நோயாளிகளுக்கு
விநியோகிக்கிறோம்.

இதுவரை தயாரித்த நாக்கர்ஸ்களை சேகரித்து 9000 மார்பகப் புற்று நோயாளிகளுக்கு வினியோகித்திருக்கிறோம். நாக்கர்ஸ் கேட்டால் இல்லை எனச் சொல்லாத அளவுக்கு ஸ்டாக் செய்தும் வைத்துள்ளோம்’’ என்கிற ஜெயஸ்ரீ ரத்தன், நாக்கர்ஸை எப்படி பயன்படுத்த வேண்டும் என்கிற அறிவுறுத்தல்கள் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழிகளிலும்
அச்சடிக்கப்பட்டு கூடவே வழங்கப்படுகிறது’’ என்கிறார்.

தன்னார்வலர் கீதா கிருஷ்ணன், துபாய்‘‘நாங்கள் டிரெயினிங் டீம். துபாய் நாட்டில் நாங்கள் 170 வாலண்டியர்ஸ் இருக்கிறோம். நிட்டிங் அல்லது குரோஷே தெரிந்தவர்கள் எங்கள் வெப் சைட் மூலம் அல்லது எங்கள் கைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு எந்த அளவுக்கு தெரிகிறது என்பதை அறிந்து, ஆன்லைன் டிரெயினிங் செஷன் கான்டாக்ட் செய்ய வைத்த பிறகு, முதலில் அவர்களை ஒன்றிரண்டு சாம்பிள் பீஸ்களை செய்து அருகில் உள்ள எங்கள் தன்னார்வலர்களை அணுகி, அவர்கள் ஓ.கே செய்துவிட்டால், தொடர்ந்து அவர்கள் நாக்கர்ஸ் செய்து அனுப்பலாம்.

ஒரு மார்பகத்தை இழந்தவர்களுக்கு இரண்டு செயற்கை மார்பகங்களையும், இரண்டு மார்பகங்களையும் இழந்தவர்களுக்கு நான்கும் வழங்கப்படும். Non surgical external product என்பதால் நோ சைட் எஃபெக்ட். பஞ்சுடன் நீரில் நனைத்து சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு நாக்கர்ஸ் தாராளமாக 20 மாதங்கள் வரும்.கூடவே நாக்கர்ஸ் பயன்படுத்த கடைகளில் மாஷ்டக்டமி பிராக்கள் (Mastectomy Bra)விற்பனையில் உள்ளன.

அதாவது, ரெகுலர் பிராவில் ஒரு பாக்கெட் இருக்கும். அதற்குள் நாக்கர்ஸ் ஒன்றை உள்ளே வைத்து பயன்படுத்தலாம். மாசக்டமி பிரா கிடைக்காதவர்கள் அவர்கள் அணியும் ரெகுலர் பிராவில் சின்னதாக ஒரு பாக்கெட் வைத்து தைத்து அதற்குள் வைத்து பயன்படுத்தலாம். தாங்கள் அணிகிற பிளவுஸ், நைட்டி என எல்லாவற்றுக்கும் இது செட்டாகும் என்பதே பயன்படுத்துபவர்கள் சொல்லும் ஃபீட்பேக்.

அதேபோல் 17 வயது வரை உள்ள கேன்சர் அஃபெக்ட் குழந்தைகளுக்கு ஹீமோ டிரீட்மென்ட் கொடுக்கும்போது முடி கொட்டும். அவர்களுக்காக கூம்பு வடிவ காட்டன் தொப்பிகளையும் (Beanies), பல்வேறு வண்ணங்களில் ஸ்மால், மீடியம், லார்ஜ் என்கிற அளவுகளில் செய்து, அதில் கார்ட்டூன் கேரக்டர்களை ஸ்டிக் செய்து கேன்சர் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது குழந்தைகளுக்கு கிஃப்ட் செய்கிறோம்.’’

தன்னார்வலர் ஸ்ரீ வித்யா, சென்னை ‘‘நாங்கள் அவுட் ரீச் டீம். வாலண்டியர்ஸ் செய்து முடித்த நாக்கர்ஸ் மொத்தமாக சென்னை ஹப் அல்லது மும்பை ஹப்பை வந்து சேரும். பிறகு ஃபில்லிங் மெட்டீரியலை வைத்து ஃபினிஷ் செய்த பிறகு, நாட் ஃபார் சேல், சாய்ஷா இந்தியா என்கிற டேக் அட்டாச் பண்ணிய பிறகே விநியோகிப்போம்.

சென்னை பிரெஸ்ட் கேன்சர் சென்டர், அடையார் கேன்சர் இன்ஸ்டியூட், அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டியூட், புதுச்சேரி ஜிப்மர் என அனைத்து மருத்துமனைகளுக்கும் நாங்கள் நாக்கர்ஸ்
வினியோகிக்கிறோம். இதுதவிர நாக்கர்ஸ் தேவை உள்ளவர்கள் எங்கள் இணையதளத்தில் உள்ள நாக்கர்ஸ் ரெக்கஸ்ட் விண்ணப்பம் வழியே தங்கள் கோரிக்கையை அனுப்பலாம் அல்லது இமெயில் பண்ணலாம். இணைய பரிச்சயம் இல்லாதவர்கள் மருத்துவர் மூலமாக எங்களை அணுகலாம் அல்லது எங்கள் தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளலாம்.’’

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post செயற்கை மார்பகம் தயாரிப்பில் பெண் தன்னார்வலர்கள் appeared first on Dinakaran.

Tags : Saisha India ,Mumbai ,Jayasree Ratan ,Tamil Nadu ,
× RELATED மும்பை நகரில் அதிகரிக்கும்...