35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோவையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க்; விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: கோவையில் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க் அமைக்கப்படும் என கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் அறிவியல் மையம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில், கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகே மத்திய சிறைக்கு சொந்தமான 6.9 ஏக்கர் காலியிடத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் மற்றும் அறிவியல் மையம் ரூ.300 கோடியில் 8 தளங்களுடன் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடந்தது. தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது:

நாடாளுமன்ற தேர்தல் தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, அமைச்சர்கள் அவரவர் துறை வாரியாக ஆய்வு செய்ய சொல்லி அறிவுறுத்தி விட்டு, தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை ஈர்க்க நான் அமெரிக்கா சென்றேன். அதை முடித்த பிறகு, துறை வாரியாக கோட்டையில் ஆய்வு நடத்தி வருகிறேன். இதற்கிடையில், மாவட்டம் வாரியாக ஆய்வு செய்ய திட்டமிட்டு, முதல் மாவட்டமாக கோவையை தேர்வு செய்து வந்துள்ளேன். இங்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த ‘‘கம்பேக்’’ கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரது சிறப்பான, வேகமான செயல்பாடுகளை பார்த்து, சில தடைகளை ஏற்படுத்தினர். அதற்குள் விரிவாக செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், இது அரசு விழா. ஆனாலும், அந்த தடைகளை உடைத்து மீண்டு வந்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர், இன்றும் சிறப்பாக செயல்படுவார் என நான் உறுதி அளிக்கிறேன்.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஐ.டி. துறை சார்ந்த நகரங்களில் கோவை முன்னணியில் உள்ளது. பல ஐ.டி. நிறுவனங்களுக்கு அலுவலக இட தேவை உள்ளது. அதனால், கோவையில் 17.17 ஏக்கர் பரப்பில் மேலும் ஒரு ஐ.டி. பார்க் அமைக்கப்படும். சென்னையில் ராமானுஜம் ஐ.டி.பார்க் உள்ளது போல், தனியார் துறையுடன் இணைந்து இந்த ஐ.டி. பார்க் மாபெரும் அளவில் உருவாக்கப்படும். இதன்மூலம், 35 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

மக்களின் வாழக்கையுடன் திராவிட மாடல் அரசு இரண்டற கலந்துள்ளது. வாக்களித்தவர்கள், வாக்களிக்க தவறியவர்கள், வாக்களிக்க மனமில்லாதவர்கள் என அனைவருக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல், அனைத்து மக்களுக்கான அரசாக நமது அரசு உள்ளது. அதனால்தான் மக்கள், நம்மை ஆதிரிக்கிறார்கள். என்னிடம் இன்னும் எதிர்பார்க்கிறார்கள். கடந்த தேர்தலைவிட இப்போது திமுக செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதனால்தான் பலர் நம்மை விமர்சிக்கிறார்கள். எத்தனை விமர்சனம் வந்தாலும், அதை பொருட்படுத்தாமல் மக்கள் பணியை தொடர்ந்து செயல்படுத்துவோம்.

நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. 50 ஆண்டு முன்பு ஒரு வடமாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது என பாருங்கள். இன்று அதை ஒப்பிடும்போது உங்களுக்கே புரியும். தமிழ்நாடு அனைத்து துறையிலும் முன்னணியில் உள்ளது. இந்தியாவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது. வறுமையின்மை, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, அமைதி, மருத்துவம். மக்கள் நல்வாழ்வு, நுகர்வு, உற்பத்தி என எல்லா துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. கொள்கையும், லட்சியமும் கொண்டு, அதை அடைய தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதால் இது சாத்தியமானது.

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்றார் அண்ணா. ஆனால், இன்று தெற்கு வளர்ந்துள்ளது. தெற்குதான் வடக்கிற்கும் வாரி வழங்குகிறது. கோட்டையில் இருந்து ஆட்சி நடத்தாமல், களத்தில் இறங்கி பணியாற்றுகிறவன் இந்த ஸ்டாலின். ஒடுக்கப்பட்ட மக்களின் முதல்வன் நான். உங்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள், கடமைகள் இன்னும் ஏராளமாக உள்ளது. அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும். நீங்கள் கொடுக்கும் உற்சாகம் எங்களை இன்னும் வேலை செய்ய தூண்டும். என்றும், உங்களில் ஒருவனாக இருப்பேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

The post 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் கோவையில் மேலும் ஒரு ஐ.டி. பார்க்; விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: