67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பங்கேற்பு

6-11-2024 முதல் 8-11-2024 வரை நடைபெறும் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் கலந்துகொள்ள பேரவைத் தலைவர் மு. அப்பாவு, நேற்று சிட்னி நகருக்கு சென்றடைந்தார். இன்று (6-11-2024) சிட்னி நகரில் டார்லிங் ஹார்பர் சர்வதேச மாநாட்டு மையத்தில் 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு தொடங்கியது. பின்னர், மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற “பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு-வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா உட்பட பல்வேறு காமன்வெல்த் நாடுகளின் பாராளுமன்ற/சட்டமன்றப் பேரவைத் தலைவர்கள் கலந்துகொண்டு, சுருக்கமாக கருத்துக்களை தெரிவித்தனர்.

காமன்வெல்த் பாராளுமன்ற தமிழ்நாடு கிளையின் சார்பாக இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு பேசுகையில்; செயற்கை நுண்ணறிவுமூலம் தகவல்கள் எளிதாக கிடைப்பதால், சில நேரங்களில் தவறான தகவல்கள் மற்றும் தவறான செய்திகள் பரவுவதால் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial intelligence) பயன்பாடு வெளிப்படையானதாகவும், உண்மைத் தன்மையுடையதாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். மேலும், இச்சிறப்புமிக்க மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் தெரிவித்தார்.

முன்னதாக, பேரவைத் தலைவர் அரசு முறைப் பயணமாக மலேசிய நாட்டிற்கு சென்றிருந்தார். மலேசியா நாடாளுமன்றத்தின் தலைவர் ஜோஹாரி அப்துல், துணை அமைச்சர் Y.B.குலசேகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, மலேசியா நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையாளர் மாடத்திலிருந்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பார்வையிட்டார். அப்போது மலேசியா நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவரின் வருகை குறித்து அறிவித்ததும், உறுப்பினர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: