×
Saravana Stores

தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் முகாம்

*ட்ரோன் மூலம் கண்காணிப்பு; கிராம மக்களுக்கு எச்சரிக்கை

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் முகாமிட்டுள்ளன. அவற்றை ட்ரோன் மூலம் கண்காணித்து வரும் வனத்துறையினர், எச்சரிக்கையுடன் இருக்குமாறு கிராம மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து கடந்த வாரம் 50 யானைகள் இடம்பெயர்ந்து தளி வனப்பகுதி வழியாக ஜவளகிரி வனச்சரகத்திற்கு வந்தன. அதில், 30 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு நகர்ந்துள்ளன. சுமார் 20 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. அருகில் உள்ள நொகனூர் வனப்பகுதி, அலஹள்ளி, தாவரகரை அகிய வனப்பகுதியில் மூன்று பிரிவுகளாக பிரிந்து யானைகள் முகாமிட்டுள்ளன.

இந்த யானைகள் அருகில் உள்ள நொகனூர், மரகட்டா, ஆலஹள்ளி, அயன்புரிதொட்டி, தாவரக்கரை, மலசோனை, கண்டகாணப்பள்ளி, ஏணிமுச்சந்திரம், பூதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தல்சூர், குருபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் புகுந்து ராகி, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ் பயிர்களை துவம்சம் செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை வனச்சகர அலுவலர் விஜயன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் நடமாட்டம் குறித்து இரவு -பகலாக ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் முகாமிட்டுள்ளன. ராகி பயிர்களை குறிவைத்து யானைகள் வரும் நிலையில், விவசாயிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். காலை-மாலை, இரவு நேரங்களில் விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு செல்ல வேண்டாம். மேலும், யானைகள் நடமாட்டம் குறித்து தெரிய வந்தால், வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

The post தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 20 யானைகள் முகாம் appeared first on Dinakaran.

Tags : Nokanur forest ,Dhenkanikottai ,Bannargata forest ,Karnataka ,Dhenkanikot ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்