முத்துப்பேட்டை, நவ.6: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. தலைமையாசிரியர் அமுதராசு வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் தேவகி துரையரசன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா கணேஷ் குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகம், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நாகராஜன் ஆகியோர் தலைமையிலும், வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா மற்றும் வட்டார விழா குழுவினர்கள் முன்னிலையில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி உஷா கலைத்திருவிழாவை குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். ஒன்றிய அளவில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான கலைத் திருவிழா கவின் மற்றும் நுண்கலை போட்டிகளான ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், களிமண் சிற்பம், செதுக்கும் சிற்பம், இசை போட்டிகளான செவ்வியல் இசை, நாட்டுப்புறப்பாடல், வில்லுப்பாட்டு, இசை வாய்ப்பாட்டு, நாடகம், தனிநபர் நடிப்பு, பாவனை நடிப்பு போன்ற பல்வேறு வகையான போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற்றது. ஆசிரியர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர்களாக செயல்பட்டனர். இதில், ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் தரன், அன்புராணி, இப்பள்ளியின் ஆசிரியர் பாக்கியராஜ் மற்றும் சிறப்பாசிரியர்கள் சங்கர், கன்னியா ஆகியோர் செய்திருந்தனர்.
The post எடையூர் அரசு மேல்நிலை பள்ளியில் கலைத் திருவிழா போட்டி appeared first on Dinakaran.