ஓசூர், நவ.6: ஓசூரில் பல்வேறு இடங்களில் ஆர்ஓ குடிநீர் மையங்கள் முறையாக செயல்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஓசூர் உழவர் சந்தை பின்புறம் ஆர்ஓ குடிநீர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தைக்கு வருபவர்கள் தாகம் தீர்த்து சென்றனர். தொடக்கத்தில் நல்ல நிலையில் இருந்து வந்த இந்த ஆர்ஓ குடிநீர் கடந்த மூன்று மாதமாக செயல்படாத நிலையில் உள்ளது. சில மையங்கள் ஓரிரு நாட்கள் மட்டும் செயல்படுகிறது. ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகள் நிறைந்துள்ளதால் பெரும்பாலானோர் அதிகாலை 5 மணிக்கு தண்ணீர் பிடிக்க செல்வார்கள். ஆனால், போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், காமராஜர் காலனியில் உள்ள மையத்திற்கு படையெடுக்கின்றனர். அந்த மையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால், அங்கேயும் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை.
ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில், 14 இடங்களில் ஆர்ஓ மையம் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மிக நிதானமாக செயல்படுவதாகவும், ஒரு சில மையங்கள் இயங்காமலும் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சரியாக பராமரிக்காததால் ஆர்ஓ மையங்கள் பழுதடைந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, அனைத்து மையங்களையும் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post செயல்படாத ஆர்ஓ மையங்கள் appeared first on Dinakaran.