உளுந்து பயிர் சாகுபடியில் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

சிவகங்கை, நவ.6: உளுந்து விவசாயத்திற்கு சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மானாவாரி மற்றும் பாசன வசதிகள் மூலம் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறைந்த நீர் ஆதாரம் கொண்டு 60முதல் 70நாட்களில் விவசாயிகள் விரைந்து பயனடைய பயறு வகைப்பயிரான உளுந்து விளைவிக்கப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் முந்தைய வருடம் கையிருப்பு உள்ள விதைகளையே விதைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால் உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோய் பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் சரியான காய்கள் இன்றி மலட்டு செடிகள் உருவாகி மகசூல் இழப்பு ஏற்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் விதைப்பண்ணை அமைத்து வீரியமுடைய மஞ்சள் தேமல் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் எதிர்ப்பு சக்தி கொண்ட அதிக மகசூல் தரும் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் அத்தகைய சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post உளுந்து பயிர் சாகுபடியில் சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: