×

நீர்மட்டம் முழு அளவில் உள்ளதால் அமராவதி அணையில் வலையில் சிக்காத மீன்கள்

உடுமலை, நவ.6: அமராவதி அணை நீர்மட்டம முழு கொள்ளளவில் உள்ளதால், வலையில் அதிக மீன்கள் சிக்குவதில்லை. இதனால் டேம் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கும் பணி மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 பரிசல்களில் தலா இருவர் வீதம் அணையில் தினசரி காலை, மாலை நேரங்களில் வலைவிரித்து மீன்பிடித்து வருகின்றனர். இவர்கள் பிடித்துவரும் மீன்களுக்கு கிலோவுக்கு குறிப்பிட்ட தொகை மீன் வளர்ச்சி கழகம் சார்பில் வழங்கப்படுகிறது. அமராவதி அணையில் கட்லா, ரோகு, மிருகால், ஜிலேபி ஆகிய 4 வகை மீன்கள் கிடைக்கின்றன. இந்த மீன்கள் அமராவதியில் உள்ள மீன் வளர்ச்சி கழக ஸ்டால் மட்டுமின்றி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஸ்டால்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

அமராவதி டேம் மீன்கள் மிகவும் ருசியாகவும், விலை குறைவாகவும் இருப்பதால், ஏராளமானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக, கேரள மாநிலம் மறையூர், கோவில்கடவு உள்ளிட்ட இடங்களில் இருந்து அதிகளவு பொதுமக்கள் நேரடியாக வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். வழக்கமாக அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவில் இருக்கும்போது, மீன்கள் அதிகம் வலையில் சிக்குவதில்லை. அணையின் அடிப்பாகத்துக்கு சென்றுவிடும். நீர்மட்டம் குறைவாக இருக்கும்போது தான் அதிகளவு மீன்கள் வலையில் சிக்கும். தற்போது அமராவதி அணை நீர்மட்டம் அதிகளவு உள்ளது. மொத்தமுள்ள 90 அடியில் நேற்று நீர்மட்டம் 87.21 அடியாக இருந்தது. நீர்மட்டம் கிட்டதட்ட முழு கொள்ளளவில் உள்ளதால் மீனவர்கள் விரிக்கும் வலையில் மீன்கள் சிக்கவில்லை.

நீர்மட்டம் 50 அடி என்ற அளவில் இருக்கும்போது, பரிசலுக்கு தலா 50 கிலோ வரை மீன் கிடைக்கும். ஆனால் தற்போது ஒன்று முதல் 3 கிலோ வரைதான் மீன் கிடைக்கிறது. இதனால் வருமானம் குறைந்துள்ளதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து வந்த டேம் மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் நேற்று திரும்பிச் சென்றனர்.

The post நீர்மட்டம் முழு அளவில் உள்ளதால் அமராவதி அணையில் வலையில் சிக்காத மீன்கள் appeared first on Dinakaran.

Tags : Amaravati Dam ,Udumalai ,Tamil Nadu Fish Development Corporation ,Dinakaran ,
× RELATED அமராவதி அணை நீர்மட்டம் 87.60 அடியாக உயர்வு