குளத்தூர், நவ. 6: குளத்தூர் அண்ணாநகர் காலனி தெருவீதிகளில் தேங்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சரள் மண் கொட்டி சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் காலனியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகில் உள்ள தெரு வீதியில் தெற்கு நோக்கி செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த வாரம் பெய்த மழையில் அப்பகுதியில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் அவ்வழியாக செல்லும் வாகனங்களால் தேங்கிய நீர் அப்பகுதியில் விளையாடும் சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது தெறிக்கிறது. மேலும் தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதுடன் தெருவீதி பள்ளங்களில் தேங்கிய மழைநீரை அகற்றி மேலும் தண்ணீர் தேங்காத வண்ணம் பள்ளங்களில் சரள்மண் கொட்டி சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குளத்தூர் அண்ணாநகர் காலனியில் தெருக்களில் தேங்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.