×

சாலையோர கடையால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம்

ஈரோடு, நவ. 6: தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் ஈரோடு ஜவுளி சந்தையில் நேற்று விற்பனை மந்தமாகவே இருந்தது. ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா கனி மார்கெட் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரை வாராந்திர ஜவுளி சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த 31ம் தேதி நடைபெற்ற தீபாவளி பண்டிகைக்கு பின் நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை குறைவாகவே இருந்தது. இதுகுறித்து, கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறுகையில், ‘‘கடந்த 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடிய நிலையில், அதற்கு முந்தைய வாரம் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை இரவு வரையிலான கனி மார்க்கெட் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வழக்கமாக நடைபெற்ற ஜவுளி சந்தையில் ஓரளவு விற்பனை இருந்தது.

இருப்பினும், கடந்த வாரம் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் பன்னீர்செல்வம் பூங்கா முதல் மணிக்கூண்டு சாலை, ஈஸ்வரன் கோவில் வீதிகள், டி.வி.எஸ். வீதி, காந்திஜி சாலை, பனியன் மார்க்கெட் பகுதிகளில் சாலை ஓரங்களிலும், சாலையின் நடுவிலும் ஆக்கிரமித்து, தற்காலிக கடைகளை அமைத்து பலரும் ஜவுளி விற்பனையில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் சாலை ஓர கடைகளில் ஜவுளி வாங்கி விட்டு, கனி மார்க்கெட் வணிக வளாக கட்டிடத்தில் உள்ள நிரந்தர கடைகளுக்குள் வரவே இல்லை. இதனால், இங்கு மிக மோசமாகவே ஜவுளி விற்பனை நடைபெற்றது. இதுபோல நடக்க வாய்ப்பிருப்பதை உணர்ந்தே, மாநகராட்சி ஆணையர் மணீஷிடம் பல முறை மனு அளித்திருந்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலையோரம் கடைகள் அமைத்தவர்களை போலீசாரும் கண்டு கொள்ளாததால், இந்த ஆண்டு ஜவுளி விற்பனை மிக மோசமாகவே இருந்தது.

பல ஆயிரம் ரூபாய் முதலீடு, சில லட்சம் ரூபாய் வரை வாடகை, பல லட்சம் ரூபாய்க்கு தீபாவளிக்கான ஜவுளிகள் கொள்முதல் என வாங்கி குவிந்த கடைக்காரர்கள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளோம். வரும் காலங்களில் இதுபோல நடக்காமல் இருக்க மாநகராட்சியும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி முடிவடைந்த நிலையில், நேற்றைய ஜவுளி சந்தையில் கனி மார்க்கெட் நிரந்தர கடைகள் தவிர வாரச்சந்தை கடைகள் குறைவாகவே திறக்கப்பட்டன. அங்கும் விற்பனை மந்தமாகவே இருந்தது. சில்லறை விற்பனை மட்டும் சுமார் 20 சதவீதம் அளவில் நடைபெற்றது. மொத்த விற்பனை முற்றிலும் இல்லை. தீபாவளிக்காக வாங்கி குவித்த ஜவுளிகளை வரும் பொங்கல் வரை வைத்திருந்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

The post சாலையோர கடையால் ஜவுளி சந்தையில் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Diwali festival ,Erode Panneer ,Selvam Park Kani Market ,Dinakaran ,
× RELATED அடையாளம் தெரியாத ஆண் சாவு