மதுரை: சீமான், சாட்டை துரைமுருகனால் எனக்கும், குடும்பத்துக்கும் ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என திருச்சி சூர்யா ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. திருச்சியைச் சேர்ந்த சூர்யா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். நான், பாஜவில் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக இருந்தேன். மேலும் சமூக ஊடகங்களில், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறேன். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து 15 ஆடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன்.
இதனால் சீமான் என் மீது பழி வாங்கும் நோக்கோடு செயல்படுகிறார். அக்கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவரும் எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். என் மீது தாக்குதல் நடத்த இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், நான் குடியிருக்கும் வீட்டின் மீது கடந்த 2022ம் ஆண்டு சிலர் தாக்குதல் நடத்தினர். அது சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, எனக்கும், குடும்பத்தினருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கினால், அரசின் விதிகளை பின்பற்றி, அதற்குரிய கட்டணத்தையும் செலுத்த தயாராக உள்ளேன். எனவே, போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனு குறித்து போதுமான விவரம் கிடைக்காததால், கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, மனு மீதான விசாரணையை நாளைக்கு (நவ. 7) தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
The post சீமான், சாட்டை துரைமுருகனால் எனக்கும், குடும்பத்துக்கும் ஆபத்து: பாதுகாப்பு கோரி திருச்சி சூர்யா ஐகோர்ட்டில் மனு appeared first on Dinakaran.