திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை நேரில் கண்டறிய கள ஆய்வை தொடங்கினார் முதல்வர்: கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு

* ரூ158 கோடியில் தொழில்நுட்ப பூங்காவையும் திறந்து வைத்தார்

கோவை: தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை அறிய மாவட்டம் வாரியான கள ஆய்வை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கினார். மேலும் கோவை விளாங்குறிச்சியில் உள்ள எல்காட் சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ₹158.32 கோடி செலவில் 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் நலத்திட்டப்பணிகள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா? என மாவட்டம் வாரியாக சென்று கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், முதற்கட்டமாக கோவையில் தொடங்க இருப்பதாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி கள ஆய்வு பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் தொடங்கினார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளாங்குறிச்சியில் உள்ள புதிய தகவல் தொழில்நுட்ப கட்டிடம் திறப்பு விழாவிற்காக காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, அவினாசி சாலையில் தொண்டர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் திரண்டு நின்று முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து முதல்வர் காரில் இருந்து கைகளை அசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் விளாங்குறிச்சிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ₹158 கோடியே 32 லட்சம் மதிப்பில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு மென்பொருள் நிறுவனங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினர். பின்னர் ஐடி நிறுவன பணியாளர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார். இதைத்தொடர்ந்து ஐடி நிறுவன நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் முதல்வருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், முக்கியத்துவம், வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அவசியம் தேவைகள் குறித்து விளக்கும் வகையில் விளக்க படம் ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள மென்பொருள் நிறுவனங்களின் குத்தகைதாரர்களுக்கு இட ஒப்பந்த ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்திற்கான கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார். இந்த தொழில்நுட்ப பூங்கா மூலம் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பின்னர் கோவை மாவட்டம், சூலூரில் அமைய உள்ள ராணுவ தளவாட பொருட்கள் தொழில்நுட்ப பூங்காவில் செயல்பட உள்ள நிறுவனங்களுக்கான ஒப்பந்த ஆணைகளை முதல்வர் வழங்கினார். முடிவில் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் செயலாளர் குமார் ஜெயந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து புறப்படும் முன் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, எம்.பி.க்கள் கணபதி ராஜ்குமார், கே.ஈஸ்வரசாமி, தலைமை செயலாளர் முருகானந்தம், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த், டிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கண்ணன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து விளாங்குறிச்சியில் இருந்து கோவை பீளமேடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நில எடுப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.

மேடையில் 10 பேருக்கு நில விடுவிப்பு உத்தரவு வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து 300 பயனாளிகள் விடுவிப்பு உத்தரவு பெற்றனர். ஆணை பெற்ற பயனாளிகள் கடந்த 35 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த எங்களுக்கு முதல்வரின் உத்தரவால் தீர்வு கிடைத்துள்ளதாக கூறி முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர், கோவை சுந்தராபுரம் சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிட்கோ தொழிற்பேட்டையில் 1.49 ஏக்கர் நிலப்பரப்பில் 98,812 சதுர அடி பரப்பளவில் ₹23 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர்களின் விடுதி கட்டுமான பணிகளை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முதல்வரிடம் தொழிலாளர்கள் மனுக்களை அளித்தனர்.
அந்த மனுக்களை பெற்ற முதல்வர் மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சிட்கோ பகுதியில் தொழிலாளர்கள் தங்கும் புதிய விடுதி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

ஆய்வின்போது தலைமைச்செயலாளர் முருகானந்தம், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கார்த்திக், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்ட பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்த ஆய்வு கூட்டம் கோவை விருந்தினர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அனைத்து பணிகளையும் உரிய காலத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, முத்துசாமி, செந்தில்பாலாஜி, டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகைப்பட்டறைக்கு திடீர் விசிட்: தொழிலாளியிடம் குறைகளை கேட்ட முதல்வர்
கோவையில் தங்க நகை சார்ந்த கைவினைப்பொருட்களுக்கு புகழ்பெற்றது. இங்கு சுமார் 2 ஆயிரம் முறையான தங்க நகை தயாரிப்பு கூடங்கள் மற்றும் வீட்டிலேயே அமையப்பெற்ற நகை தயாரிப்பு கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 1.50 லட்சம் பேர் வேலை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த தொழிலாளி ஐயப்பன் என்பவரிடம் 10 நிமிடங்களுக்கு மேல் முதல்வர் கலந்துரையாடி அவரது குறைகளை கேட்டறிந்தார். முதல்வரிடம் ஐயப்பன், ‘‘கடந்த 17 வருடங்களுக்கு மேலாக நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறேன். வேலையில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். இதனால், தீபாவளியைகூட சரிவர கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

வறுமையில் இருக்கும் நகைப்பட்டறை தொழிலாளர்களுக்கு ஹவுசிங் யூனிட் பகுதியில் வீடு கட்டித்தர வேண்டும். குறைந்த வாடகையில் நகைப்பட்டறைகளை அரசே கட்டித்தர வேண்டும். கோவையில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவில் கைவினைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இதனை கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
இது குறித்து தொழிலாளி ஐயப்பன் கூறுகையில், ‘‘நான் வழக்கம்போல் பணி செய்து கொண்டு இருந்தேன். அப்போது பட்டறைக்குள் தமிழ்நாடு முதல்வர் வந்தார். என்னை பார்த்து வணக்கம் என்று கூறினார். இது எனக்கு பெரும் அதிர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. காலையில் சங்கத்தின் சார்பில் முதல்வரை சந்திக்க விருந்தினர் மாளிகைக்கு சென்றிருந்தோம். அப்போது, 2 பேர் மட்டுமே முதல்வரை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனால் எனக்கு முதல்வரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அப்போது முதல்வர் சங்க நிர்வாகிகளுடன் உங்கள் கோரிக்கைகளை படித்துவிட்டேன். தங்க நகைப்பட்டறைக்கு நேரில் வந்து ஆய்வு செய்வதாக கூறினார்.இந்நிலையில், திடீரென்று முதல்வர் எனது பட்டறைக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பட்டறையில் அமர்ந்து நகைகளை கையில் எடுத்து பார்த்து அது தொடர்பான கேள்விகளை கேட்டறிந்தார். மேலும் குறைகள் ஏதாவது இருக்கிறதா? எனவும் கேட்டார். ஏன் இத்தொழில் பின்தங்கிய நிலையில் உள்ளது எனவும் கேட்டார். அப்போது எங்களின் பிரச்சனைகளை முதல்வரிடம் முன்வைத்தேன். இத்தொழிலில் குறைந்த அளவில் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்த முடிவதில்லை என்று கூறினேன். கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

இந்த தொழிலை அரசு தான் பாதுகாக்க வேண்டும் என்று கூறினேன். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என முதல்வர் தெரிவித்தார். முதல்வர் என் பணியிடத்திற்கு வந்து என்னுடன் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதனை என் வாழ்நாளில் மறக்க முடியாது’’ என்றார். முன்னதாக கோவை ரேஸ்கோர்ஸ் விருந்தினர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தங்க நகை தொழில் அமைப்பினர் சந்தித்தனர். தங்க நகை ஏற்றுமதி, தங்க கட்டி இறக்குமதி, தங்க நகைகள் வடிவமைப்பில் கோவைதான் இந்தியாவின் முதன்மை பகுதியாக உள்ளதால் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்றும், அவ்வாறு அமைந்தால் தமிழகம் தொழில் துறையில் உன்னதமான பிடித்து விடும் என்று தங்க நகை தயாரிப்பாளர் சங்க தலைவர் முத்து வெங்கட்ராமன் தலைமையில் முதல்வரிடம் மனு அளித்தனர்.

பின்னர் முதல்வருக்கு வெள்ளி வாள் பரிசாக வழங்கினர். முதல்வருடன் சந்திப்பில் தங்க நகை தயாரிப்பாளர் சங்கம், வியாபாரிகள் சங்கம், தங்க கட்டி விற்பனையாளர் சங்கம், பரம்பரை விஸ்வகர்ம தங்க நகை வியாபாரிகள் சங்கம், கோல்டு ஸ்மித் ஒர்க்கர் சங்கம், மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய வியாபாரிகள் சங்கத்தினர், கைவினைஞர்கள் தங்க நகை தயாரிபாளர் சங்கத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

அதிமுக ஆட்சியால் குளறுபடி
புதிய ஐடி பார்க்க நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்புரையாற்றி பேசுகையில், “கோவையில் தொழில்நுட்ப பூங்கா கட்ட 2020-ல் திட்டமிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடியால் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் இருந்த பிரச்னையை தாண்டி தற்போது தகவல் தொழில்நுட்ப பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடம் ₹158 கோடி 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது.‌ இதன் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்” என்றார்.

4 கிலோ மீட்டர் கடக்க 1 மணி நேரம் ஆனது: கோவை மக்களின் அன்பில் நெகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின்
கோவைக்கு நேற்று வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருக்கு பூங்கொத்துகள், புத்தகங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி வரவேற்பு அளித்தனர். ஒயிலாட்டம், கரகாட்டம், செண்டை மேளம், தப்பாட்டம், பறை இசை வாசித்து கலைஞர்கள் உற்சாகமாக வரவேற்றனர். முதல்வரை பார்ப்பதற்காக அவினாசி சாலையின் இரு புறங்களிலும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் திரண்டனர். விமான நிலையத்தில் இருந்து விளாங்குறிச்சி சாலை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொதுமக்கள் சாலையோரம் திரண்டு இருந்தனர்.

இதனால், முதல்வரின் கார் விழா நடைபெறும் இடத்தை அடைய சுமார் ஒரு மணி நேரம் பிடித்தது. முதல்வரிடம் பொதுமக்கள் பலர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களின் வரவேற்பை கண்டு நெகிழ்ந்துபோன முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நல்லா இருக்கீங்களா தலைவரே…எனக் கோவை விமான நிலையம் முதல் எல்காட் வரையில் திரண்டிருந்த மக்களின் வரவேற்பு. 4 கிலோ மீட்டர் கடக்க ஒரு மணிநேரம் ஆனது! கோவை மக்களின் அன்பு!’’ என பதிவிட்டுள்ளார்.

ரூ2 ஆயிரம் கோடியில் பேஸ்-2 ஐடி பூங்கா
தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கோவை விளாங்குறிச்சி பகுதியில் 17.17 ஏக்கர் பரப்பளவில் ₹2 ஆயிரம் கோடி மதிப்பில் 26 லட்சம் சதுர அடியில் பேஸ்-2 தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. இதன் நில மதிப்பு ₹240 கோடியாகும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்’’ என்றார்.

மாபெரும் நூலகத்துக்கு இன்று அடிக்கல்
பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 9.45 மணியளவில் காந்திபுரம் பகுதியில் ₹300 கோடி மதிப்பில் மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கான அடிக்கல் நாட்டுகிறார். இந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தின் அருகே உள்ள மத்திய சிறைச்சாலைக்கு சொந்தமான 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் அமைய உள்ளது. இதில், குழந்தைகளுக்கான நூலகம், போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் நபர்களுக்கான நூலகம், டிஜிட்டல் நூலகம் மற்றும் தமிழ், ஆங்கிலம் என தனித்தனி பிரிவுகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தவிர, கழிவறை, லிப்ட் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெறவுள்ளது. மாணவர்கள், ெபாதுமக்களுக்காக பல லட்சம் கணக்கான புத்தகங்கள் நூலகத்தில் இடம்பெற உள்ளது. கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

The post திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை நேரில் கண்டறிய கள ஆய்வை தொடங்கினார் முதல்வர்: கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: