ராமநாதபுரம் : தொண்டி அரசு கிழக்கு துவக்க பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாமல் மாணவ,மாணவியர் அவதிப்படுகின்றனர்.தொண்டி அரசு கிழக்கு துவக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் 250க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வகுப்பறையும் குளிரூட்டப்பட்ட அறையாக உள்ளது. டிஜிட்டல் கிளாஸ் ரூம், கணினி அறை என அனைத்தும் இருந்தும் போதிய கழிப்பறை வசதி கிடையாது.
மாணவர்கள் சிறுநீர் கழிக்க அருகில் உள்ள இடியும் நிலையில் உள்ள கழிப்பறைக்கு செல்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி இல்லை. இருக்கும் கழிப்பறையும் பாதுகாப்பற்று உள்ளது. கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், புதிய கழிப்பறை கட்டிடம் கட்டித் தர எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. பள்ளி மேலாண்மை குழு சார்பில் நேற்று கழிப்பறை வசதி வேண்டி, பள்ளியின் அருகில் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள பொருள்களை அகற்ற கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழு தலைவி காளீஸ்வரி கூறியது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை வசதி வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் இங்கு கழிப்பறை வசதி கிடையாது. பல ஆண்டுகளாக கூறியும் பலன் இல்லை. இதேபோல் பள்ளியின் அருகில் இடியும் நிலையில் உள்ள சுவர், பள்ளியின் அருகில் போட்டுள்ள பொருள்களை அகற்ற, பள்ளிக்கு விளையாட்டு மைதானம் ஒதுக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.
The post தொண்டி அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி வேண்டும் appeared first on Dinakaran.