தமிழ்நாடு முழுவதும் ரூ.6,000 கோடி மோசடி; நியோமேக்ஸ் நிறுவனம் மீது நவ.15 வரை புகார் தரலாம்: போலீசார் அறிவிப்பு

மதுரை: நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பணத்தை ஏமாந்தவர்கள் நவ.15 வரை புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவினர் கூறியுள்ளனர். மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் ரூ.6 ஆயிரம் கோடியை மோசடி செய்தனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பலரை கைது செய்தனர்.

ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், மதுரையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். அதாவது, முதலீட்டாளர்கள் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் எண், பாண்டுகளின் எண்ணிக்கை, நிறுவனத்தின் பெயர், முதலீட்டுத் தொகை, முதலீடு செய்த வங்கி கணக்கு ஏஜென்ட்களின் விவரம் உள்ளிட்டவைகளுடன் புகார் அளிக்கலாம். மதுரை மாநகர் தபால்தந்திநகர் பார்க் டவுன், சங்கரபாண்டியன் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நவ.15 வரை நேரில் புகார் அளிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் ரூ.6,000 கோடி மோசடி; நியோமேக்ஸ் நிறுவனம் மீது நவ.15 வரை புகார் தரலாம்: போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: