சென்னை: பைக் மீது தறிகெட்டு ஓடிய கார் மோதிய விபத்தில் சென்னை மாதவரத்தை சேர்ந்த பெண் எஸ்ஐ, ஏட்டு ஆகியோர் பலியாகினர். கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (38), மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் நித்யா (35). இருவரும் சென்னை எண்ணூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கூடுதல் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் இருவரும் சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சுமார் 1 மணி அளவில் பைக்கில் சென்றுள்ளனர். ஜெயஸ்ரீ வாகனத்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. மேல்மருவத்தூர் அருகே உள்ள சிறுநாகலூர் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இவர்களின் பைக் மீது மோதியது. இதனால், இருவரும் பைக்குடன் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் அந்த காரும் சாலையில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த எஸ்ஐ ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து பலியானார். இதையடுத்து காரை ஓட்டிவந்த நபர், லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நித்யாவை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை அவரும் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேல்மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கி சேதமடைந்த காரை மீட்டு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய டிரைவரை தீவிரமாக தேடி வந்தனர். இதனிடையே விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் குன்னம்குப்பம் பகுதியை சேர்ந்த மதன்குமார் (24) என தெரிய வந்தது.
விபத்தை ஏற்படுத்திய மதன்குமார் மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் நேற்று காலை சரணடைந்தார். விபத்து தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்மருவத்தூர் அருகே நேற்று அதிகாலை நடந்த விபத்தில் சென்னையை சேர்ந்த பெண் எஸ்ஐ மற்றும் ஏட்டு விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
* மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம்
விபத்தில் பலியான ஜெயஸ்ரீயின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் கூடல் புதூர் கிராமம். இவரது கணவர் ஜான். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர்களது மகன் விகாஷ் (15), மகள் விகிதா (10). இவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர். ஜெயஸ்ரீ சமூகவலைதள பக்கத்தில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். போலீஸ் தொடர்பான ஏராளமான பதிவுகள் போட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பெரும்பாலான குற்றவாளிகளை தனியாக சென்று பிடித்து சாதனையும் படைத்துள்ளார். இதன் காரணமாக ஜெயஸ்ரீக்கு காவல்துறையில் தனி மரியாதை இருந்துள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்த ஏட்டு நித்யாவின் சொந்த ஊர் திண்டுக்கல் அருகே கொசவபட்டி கிராமம். கணவரை பிரிந்து வாழ்ந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார். ஜெயஸ்ரீயும், நித்யாவும் ஒன்றாக படித்தவர்கள் என கூறப்படுகிறது. ஒரே இடத்தில் பணிபுரிந்ததால் நெருக்கமாக பழகியுள்ளனர். ஜெயஸ்ரீக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வமிக்கவர். லடாக் வரை அவர் மோட்டார் சைக்களிலேயே சென்று வந்துள்ளார். இதற்கான வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. ஏட்டு நித்யா 3 நாள் லீவில் இருந்துள்ளார். ஆனாலும், ஜெயஸ்ரீயுடன் நேற்று சென்றுள்ளார். இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post மேல்மருவத்தூர் அருகே அதிகாலை விபத்து பைக் மீது கார் மோதியதில் பெண் எஸ்ஐ, ஏட்டு பலி appeared first on Dinakaran.