உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது: டிரம்ப்-கமலா இடையே கடும் போட்டி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். உலகமே எதிர்பார்க்கும் தேர்தல் முடிவுக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் நடைபெறுகிறது. அதன்படி நாளை (இந்திய நேரப்படி நவ. 6) நடைபெறும் அதிபர் தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும் (60), குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் (78) போட்டியிடுகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு
நாளுக்கு முன்பாகவே பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியும். இதன்படி தேர்தலுக்கு முன்பாக இதுவரை 7 கோடி பேர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கோ, குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கோ வாக்காளர்கள் நேரடியாக வாக்களிக்கமாட்டார்கள். அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக்காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள். ெமாத்தமுள்ள 50 மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்களில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளரே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும். நாளை (நவ. 5 – இந்திய நேரப்படி நவ. 6) வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு அன்றிரவு 50 மாகாணங்களிலும் வாக்குகள் எண்ணப்படும். அன்றிரவே அமெரிக்காவின் புதிய அதிபர் யார்? என்பது தெரியவரும்.

தற்போதைய தேர்தலில் கமலா ஹாரிஸ் – டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதால், கடந்த தேர்தலை ேபான்று இந்த முறையும் அதிபர் தேர்தலில் இழுபறி ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் தேர்தல் முடிவுகளை இறுதி செய்ய சில நாட்கள் ஆகலாம் என்கின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக தேசிய அளவிலும் மாகாண அளவிலும் கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தேசிய அளவில் சில கருத்துக்கணிப்புகள் கமலாவுக்கு ஆதரவாகவும் வேறு சில கணிப்புகள் டிரம்புக்கு ஆதரவாகவும் உள்ளன. எனினும் பெரும் பாலான கணிப்புகளில் இருவருக்கும் இடையிலான வாக்கு சதவீதத்தின் இடைவெளி ஒரு சதவீதமாக உள்ளது.

இஸ்ரேல் – காசா, ஈரான், லெபனான் இடையிலான போர், ரஷ்யா – உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் முடிவுக்கான ‘கவுன்டவுன்’ தொடங்கியுள்ளதால், அமெரிக்க அரசியலில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலை போல், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளதாகவும், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகள் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடக்கிறது: டிரம்ப்-கமலா இடையே கடும் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: