சென்னையில் அதிகாலை பரவலாக மழை; வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் அதிகாலை பரவலாக மழை பெய்த நிலையில், வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது. இதனால் தமிழகத்தில் 9ம் தேதி வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று அதிகாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கிண்டி, வேளச்சேரி, பெருங்களத்தூர், கோயம்பேடு, அடையாறு, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக கோடம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, கோயம்பேடு, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பதிவானது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிகாலையில் வேலைக்கு செல்வோர் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். இருப்பினும் பகல் நேரங்களில் வெயில் வாட்டிய நிலையில், தற்போது சென்னை மாநகர் பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகே, இன்று புதிதாக வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகலாம். அதன் தாக்கத்தால் அப்பகுதியில் வரும் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, 7ம்தேதி முதல் 11ம் தேதி வரையிலான நாட்களில், புயல் சின்னமாக வலுவடைந்து, தமிழக கரையை நெருங்கலாம். தற்போதைய நிலவரப்படி இந்த நிகழ்வுக்கு, 40 சதவீதம் மட்டுமே சாத்தியக்கூறுகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில், தென்மேற்கு வங்கக் கடலில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. இதனால், தமிழகம், தெற்கு ஆந்திரா, கேரள பகுதிகளில், வரும் 7ம் தேதி முதல் 11ம்தேதி வரை, கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது தென்கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. அதிலும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வட மாவட்டங்களில் மழை தீவிரம் அடைய இருக்கிறது.

அதன்படி, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் அதிகாலை பரவலாக மழை; வங்கக்கடலில் வரும் 7ம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: