தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டில் உடைந்து தந்தை, மகன் சாவு

திண்டுக்கல்: தூங்கிக் கொண்டிருந்தபோது, இரும்புக் கட்டில் உடைந்து தந்தை, மகன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபிக்கண்ணன் (35). டெய்லர். மனைவி லோகேஸ்வரி (30). இவர், நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்கள் கார்த்திகேயன் (8), லோகேஸ்வரன். இந்நிலையில், லோகேஸ்வரி நேற்று இரவுப் பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் கோபிக்கண்ணன், மகன் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று இரவு இரும்புக் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் உள்ளே கட்டிலின் இரும்பு சீட் உடைந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. படுகாயத்துடன் தந்தை இறந்து கிடந்தார். மகன் படுகாயத்துடன் மயங்கிக் கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு கொசவபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் சிறுவன் இறந்ததாக தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரணையில், ‘தந்தை, மகன் ஒன்றாக படுத்து தூங்கியபோது, நட்டு கழன்று படுத்திருந்த இரும்பு சீட் கீழே இறங்கியதில் இருவரின் கழுத்தும் சீட்டுக்கு மேலே இருந்த கம்பிக்கும் இடையில் சிக்கி கழுத்து நெரித்து இறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டில் உடைந்து தந்தை, மகன் சாவு appeared first on Dinakaran.

Related Stories: