×

பழைய சாப்ட்வேர்களால் காலவிரயம் பி.எப் அலுவலகங்கள் நவீனமாகுமா? சந்தாதாரர்கள் கோரிக்கை

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, 2022-2023ம் ஆண்டு கணக்கீட்டின் படி நாடு முழுவதும் 29.88 கோடி கணக்குகளை பராமரிக்கிறது. 1952ல் இயற்றப்பட்ட வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டமானது, தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி பிடிப்பதை கட்டாயமாக்கியது. இச்சட்டப்படி இயங்கும் மத்திய அறங்காவலர் குழு, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டம், சந்தாதாரர்களுக்கான ஓய்வூதிய திட்டம் மற்றும் வைப்பு தொகையுடன் இணைந்த காப்பீடு திட்டம் என மூன்று திட்டங்களை நிர்வகிக்கிறது.

1971ல் குடும்ப ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தபட்டு, 1995க்கு பின் அத்திட்டம், சந்தாதாரர்களுக்கான ஓய்வூதிய திட்டமாக மாறியது. இதன்படி, தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலனுக்காக, அவர்களின் மாதாந்திர ஊதியத்தில் ஊழியர்களின் பங்களிப்பு, தொழில் தரும் உரிமையாளர் பங்களிப்புடன் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்த தொகையை, அவர்களின் ஓய்வுக்கு பின்போ அல்லது அவர்களுக்கு தேவைப்படும்போதோ முன்பணமாக வழங்குவதற்கான பணிகளையே வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் செய்கின்றன.

தேசிய அளவில் 147 மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இதில், அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.  அவற்றில், 2010க்கு முன்பு வரை ‘பாக்ஸ் ப்ரோ’ மென்பொருள் (சாப்ட்வேர்) பயன்படுத்தபட்டு வந்தது. 2011 முதல், ‘ஆரக்கிள் மற்றும் டெவலப்பரால்’ தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போதே, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ எனும் வன்பொருளும், அதனுடன் சேர்ந்த ‘எச்.பி.’ சர்வரும் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் பரிமாற்றத்திற்காக, அன்றைய தேதியில் புதிதாக சந்தைக்கு வந்த, 100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்-5 நெட்வொர்க்’ வடங்களும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரைப்படி வன்பொருளை (ஹார்ட்வேர்) பொருத்தவரை ‘எச்.பி., நிறுவனத்தின் திங்க் கிளைண்ட்’ வன்பொருளும், சர்வரை பொருத்தவரை ‘ஐபிஎம்’ நிறுவன சர்வரும், செயல்பாட்டில் சிறப்பாக இருக்கும் எனக்கூறப்பட்ட நிலையில் ஐபிஎம் சர்வருக்கு பதில், எச்பி சர்வர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டதற்கு அப்போதே ஆட்சேபனை எழுந்தது. எனினும், எச்பி சர்வர் செயல்பாட்டில் ஓரளவு சிறப்பாக இருந்த நிலையில், 2016ல் அந்த வன்பொருளின் பயன்பாட்டுகாலம் (வாரண்டி) முடிவுற்றதாக, ‘எச்.பி’ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உலகளவில் வன்பொருள் ஒன்றின் வாரண்டி காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டால், அதற்கடுத்த நிலையில் உள்ள நவீன வன்பொருளை பயன்படுத்த வேண்டுமென்பதே விதியாக உள்ள நிலையில், 8 ஆண்டுகளாகியும் 2011ல் அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியான பழைய வன்பொருள்களாலேயே, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் நாடு முழுவதும், 20 சதவீதம் வைப்பு நிதி அலுவலகங்கள் காலவதியான ‘எச்.பி. – திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ வன்பொருள்களாலேயே இயங்குகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சியால் வன்பொருளை பொருத்தவரை, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-740’ வரையும், தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் நெட்வொர்க் வடங்கள், 1000 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்- 8 மற்றும் 9’ வடங்கள் வரையும், இன்றைய சந்தைக்கு வந்துள்ளன. இவ்வாறு வந்துள்ள வன் மற்றும் மென் பொருள்களை பயன்படுத்தி, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படாததால், தொழில் நிறுவனங்கள், அதன் சந்தாதாரர்கள், ஏற்கனவே ஓய்வூதியம் பெறுவோர், புதிதாக ஓய்வூதியம் பெற உள்ளவர்களுடன், வைப்பு நிதி அலுவலக ஊழியர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால், நாடு முழுவதும் உள்ள வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மனுக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தீர்வு காண முடியாமல் திண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் ஒவ்வொரு மண்டல அலுவலகத்தில் இருந்தும், அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை 50 முதல் 100 பேர் வரை விருப்ப ஓய்வு பெறுவது, தொடர் மருத்துவ விடுப்பில் செல்வதுமாக உள்ளனர்.

இது, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திலும், 40 சதவீதத்திற்கும் மேல் ஊழியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு, அதிகரிக்கும் காலி பணியிடங்களால் சந்தாதாரர்களுக்கு குறித்த நேரத்திற்குள், தரமான சேவை வழங்க முடியவில்லை. ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கு தீர்வு கண்டால், வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களின் செயல்பாடு மும்மடங்கு அதிகரிக்கும் என சந்தாதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வைப்பு நிதி அலுவலகங்கள் நவீனமயமானால் அவற்றின் கணக்கு வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள் மாதந்தோறும், 15ம் தேதிக்குள் அவர்களின் கணக்குகளுக்கான பணத்தை ஆன்லைனில் சரியாக செலுத்த முடியும். அதனால், கால தாமதம் காரணமாக, அவர்கள் வட்டி கட்டுவதையும், அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தையும் தவிர்க்கலாம்.

The post பழைய சாப்ட்வேர்களால் காலவிரயம் பி.எப் அலுவலகங்கள் நவீனமாகுமா? சந்தாதாரர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : EU government ,Dinakaran ,
× RELATED மாநில பேரிடர் நிதியில் இருந்து நடப்பு...