கேரளாவில் விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் ரயில் மோதி பரிதாப பலி: தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சோகம்


திருவனந்தபுரம்: ரயில்வே பாலத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த சேலத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று கேரள மாநிலம் சொரணூர் ரயில் நிலையம் அருகே உள்ள பாரதப்புழா ஆற்றுப் பாலத்தின் அருகே சேலம் மாவட்டம் அடிமலைபுதூர், அயோத்தியா பட்டணம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (48), இவரது மனைவி ராணி (45), இன்னொரு லட்சுமணன்(60), அவரது மனைவி வள்ளி(55) உட்பட 10 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது.

ரயில் வருவதைப் பார்த்ததும் அவர்கள் விலகி ஓட முயன்றனர். இதில் 6 பேர் ஓடி தப்பினர். 2 லட்சுமணன்கள், வள்ளி மற்றும் ராணியால் ஓடி தப்ப முடியவில்லை. ரயில் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில் மோதிய வேகத்தில் ஒருவரது உடல் பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தது. இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சொரணூர் ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் கிடந்த 3 பேரின் உடல்களை மீட்டனர். பாலத்திலிருந்து விழுந்த லட்சமணன் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்ட 3 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சொரணூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து சொரணூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராணியும், வள்ளியும் சகோதரிகள் ஆவர்.

The post கேரளாவில் விபத்து; தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் ரயில் மோதி பரிதாப பலி: தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சோகம் appeared first on Dinakaran.

Related Stories: