சென்னை: வங்கக்கடலில் வருகிற 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகின. இதில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது.
டானா என பெயரிடப்பட்ட அந்த புயல், ஒடிசா அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து மழைப் பொழிவு சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வடகிழக்கு பருவமழை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நவம்பர் மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நவம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 123 சதவீதம் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், கிழக்கு திசை காற்று முழுமையாக தென் இந்திய பகுதிகளில் பரவி பருவமழை முழுவதுமாக தொடங்க உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் வருகிற 5ம் தேதி அதிகாலையில் இருந்தே மழைக்கான வாய்ப்பு தொடங்கிவிடும். இதன் தொடர்ச்சியாக தென் இந்திய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். பருவமழையின் தீவிரத்தை காட்டும் வகையில் வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும்.
அந்த வகையில் தெற்கு வங்கக்கடலில் வருகிற 7 அல்லது 8ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று வட தமிழக பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை இரவு மற்றும் அதிகாலை வேளையில் நல்ல மழை பெய்து வருகிறது. சொல்லப்போனால், சென்னையில் கடந்த 3 நாட்களாக வெயிலை பார்க்க முடியாத நிலை தான் இருந்து வருகிறது.
இதனால் சென்னைவாசிகள் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியதாவது: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post வங்கக் கடலில் வருகிற 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது; 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.