சத்தியமங்கலம்: தீபாவளி நாளான நேற்று பட்டாசு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை மரம், குடிசை வீடு எரிந்து சேதமானது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் நகர் பகுதியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் காலனியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று இரவு பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர். அப்போது வானில் மேல்நோக்கி பறந்து சென்று வெடிக்கும் ராக்கெட் ரக பட்டாசுகளும் வெடிக்கப்பட்டது. இந்த நிலையில், ராக்கெட் பட்டாசு வெடித்தபோது அப்பகுதியில் உள்ள அருண்குமார் என்பவரது வீட்டில் இருந்த தென்னை மரத்தில் பட்டாசு பட்டதில் தென்னை மரத்திலிருந்து ஓலை தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தென்னை மரத்தில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தென்னை மரம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (29). தேமுதிக நகர துணை தலைவராக உள்ளார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட குடிசை வீடு உள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு நேற்று ராஜேஷ்குமார் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார்.
அவரது தாய் சரசாள் என்பவர் மட்டும் வீட்டில் இருந்தார். இதற்கிடையே அப்பகுதியில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்த போது எதிர்பாராத விதமாக ராஜேஷ்குமாரின் மொட்டை மாடியில் இருந்த குடிசை வீட்டில் பட்டாசு தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் தீ மளமளவென பரவியது. அங்கு விரைந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் குடிசை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. தீவிபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post தீபாவளி நாளில் பட்டாசு வெடித்து தீ விபத்து; தென்னை மரம், குடிசை வீடு எரிந்து சேதம் appeared first on Dinakaran.