சீக்கியருக்கு எதிராக தாக்குதல் நடத்த உத்தரவிட்டது அமித்ஷா தான்: கனடா அமைச்சர் குற்றச்சாட்டு

ஒட்டாவா: கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்கும்படியும், அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா குற்றஞ்சாட்டி உள்ளது. கடந்த 2023, ஜூனில், பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனடாவை சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய அரசு இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இது இந்தியா – கனடா இடையிலான உறவை வெகுவாக பாதித்துள்ளது. இரு நாடுகளும் தமது தூதர்களை சமீபத்தில் திரும்ப அழைத்து பிரச்னையை மேலும் சிக்கலாக்கினர். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது, கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டேவிட் மோரிசன் கடும் குற்றச்சாட்டை நேற்று முன்வைத்தார்.

அப்போது, கனடாவில் உள்ள சீக்கியர்களுக்கு எதிரான தகவல்களை சேகரிக்கும்படியும், அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் அமித்ஷா உத்தரவிட்டதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் மோரிசன் கூறினார். இருப்பினும், இந்த தகவல் எப்படி தெரியும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அமித்ஷா மீதான குற்றச்சாட்டு குறித்து, கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

The post சீக்கியருக்கு எதிராக தாக்குதல் நடத்த உத்தரவிட்டது அமித்ஷா தான்: கனடா அமைச்சர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: