இதையடுத்து நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி ராஜா மற்றும் ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, முருகேசன் எம்எல்ஏ, நவாஸ் கனி எம்.பி, வாரியத்தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று, கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர் திருமகன் என பேரறிஞர் அண்ணா பாராட்டியிருக்கிறார். வீரராக பிறந்தார்; வீரராக வாழ்ந்தார்; வீரராக மறைந்தார்; மறைவுக்குப் பிறகும் வீரராக போற்றப்படுகிறார் என கலைஞர் புகழ்ந்து பேசியிருக்கிறார். அத்தகைய தியாகியை போற்றும் அரசாக திமுக அரசு செயல்படுகிறது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
பசும்பொன் தேவர் அவர்களை போற்றி கழக அரசு செய்திருக்கக்கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை நான் உங்களிடத்தில் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன். மதுரை மாநகரில் மாபெரும் வெண்கலச் சிலை, பசும்பொன் மண்ணில் நினைவில்லம், மேலநீலிதநல்லூர் – கமுதி – உசிலம்பட்டி ஆகிய இடங்களில் மூன்று அரசு கலைக் கல்லூரிகள், மதுரை ஆண்டாள்புரத்தில், முத்துராமலிங்கத் தேவர் பாலம் என்று பெயரிட்டோம்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 2007ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை மிக எழுச்சியோடு நாம் கொண்டாடியிருக்கிறோம். அப்போது, திருமகனார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விழாவை அடையாளம் காட்டக்கூடிய வகையில் வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது.
அணையா விளக்கும் நாம் அமைத்திருக்கிறோம். நூலகக் கட்டிடம், பால்குடங்கள் வைப்பதற்கு மண்டபம், முளைப்பாரி மண்டபம் என்று பசும்பொன் தேவர் திருமகனாருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம். இப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு குருபூஜை நடத்தியிருக்கிறோம்.
பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது. நேற்று முன்தினம் கூட, பசும்பொன் திருமகனாரின் பிறந்தாள் விழாவின்போது ஏற்படுகின்ற கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், மழை, வெயிலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் ரூ.1.55 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்ட தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
* ‘தமிழக மீனவர்கள் கைதுக்கு தீர்வு காண பேசி வருகிறோம்’
பேட்டியின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ‘பாஜ மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. மீனவர்களின் கைது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது’ என்றனர். இதற்கு முதல்வர், ‘‘தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத் துறை அமைச்சரிடத்திலும் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம்.
அவர்களும் அவ்வப்போது, நாங்கள் எழுதக்கூடிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும், இது தொடர்ந்து இருந்துவருகிறது. இதற்கு முடிவு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம்’’ என்றார். அவர் மேலும் கூறுகையில், ‘‘கலைஞரால், தொடங்கப்பட்ட தேவர் கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
இப்போது கூட 12 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும். 2008ல் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் காவிரி – குண்டாறு திட்டத்தின் முதற்கட்டப் பணி கதவணையிலிருந்து துவக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் 9 ஆண்டு காலம் அதை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள்.
கடைசி வருடத்தில் தான் அதை செய்யப்போகிறோம் எனும் அறிவிப்பை வெளியிட்டு தொடர்ந்தார்கள். அதுவும் கோவிட் பெருந்தொற்று வந்த காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது 40 சதவிகிதம் வரை நிலஎடுப்பு பணிகள் முடிந்திருக்கிறது. தொடர்ந்து அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்’’ என்றார்.
The post தேவருக்கு பெருமை சேர்க்கும் திமுக அரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.