ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றி 2012ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் மீண்டும் அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபின், ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்கு தொடர்வதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கைத் திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை விடுவித்து 2012ல் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ‘முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை திரும்ப பெற அனுமதித்து குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, மற்றும் தம்பி ஓ.பாலமுருகன் ஆகியோர் இறந்துவிட்டதால் அவர்களுக்கு எதிரான வழக்கு கைவிடப்படுகிறது.
இந்த வழக்கு மதுரை எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படுகிறது. நவம்பர் 27ம் தேதிக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு சிவகங்கை நீதிமன்றம் அனுப்ப வேண்டும். ஆவணங்களை பெற்ற பிறகு சிவகங்கை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜரானால் அவர்களிடம் பிணை பத்திரத்தை பெற்று ஜாமீன் வழங்கலாம்.
வழக்கை இழுத்தடிக்க முயற்சித்தால், சம்பந்தப்பட்டவர்களின் ஜாமீனை மதுரை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்விசாரணை அறிக்கையை துணை அறிக்கையாக எடுத்து வழக்கை விசாரிக்க வேண்டும். வழக்கின் விசாரணையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி 2025 ஜூன் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவு துறைக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
The post சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து: மீண்டும் தினந்தோறும் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.