நிவாரண பணிகளை மேற்கொண்ட ஐ.நா அமைப்பை தடை செய்தது இஸ்ரேல்: காசாவுக்கு உதவிகள் கிடைப்பதில் சிக்கல்

டெர் அல் பலா: கடந்தாண்டு, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில், 1100 பேர் உயிரிழந்தனர்.நூற்றுக்கும் மேற்பட்டோர் பயங்கரவாதிகளிடம் பணயக் கைதிகளாக சிக்கியுள்ளனர். இதையடுத்து, கடந்த ஒராண்டாக, பாலஸ்தீனத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்தின் வடக்கு காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே, போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள பாலஸ்தீனர்களுக்கு பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரணம் மற்றும் பணி ஏஜென்சி(யுஎன்ஆர்டபிள்யுஏ) உணவு மற்றும் மருத்துவ உதவிகளை அளித்து வருகிறது.

இந்த அமைப்பின் செயல்பாடுகளை தடுக்கும் நோக்கில் இஸ்ரேல் நாடாளுமன்றம் இரண்டு சட்டங்களை நேற்று நிறைவேற்றி உள்ளது. இதன்படி, யுஎன்ஆர்டபிள்யுஏ அமைப்பு இஸ்ரேலில் அதிகாரபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* ஹிஸ்புல்லா புதிய தலைவராக நயீம் காசிம் அறிவிப்பு

லெபனானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக நயீம் காசிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து, அண்டை நாடான லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், இஸ்ரேலின் சில பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கடந்த மாதம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து லெபனான் மீதும், இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளில் ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இவர், மறைந்த ஹசன் நஸ்ரல்லாவின் வலதுகரமாக நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

The post நிவாரண பணிகளை மேற்கொண்ட ஐ.நா அமைப்பை தடை செய்தது இஸ்ரேல்: காசாவுக்கு உதவிகள் கிடைப்பதில் சிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: