×

தித்திக்கும் தீபாவளி!

நன்றி குங்குமம் டாக்டர்

தீபாவளி… பட்டாசு, புத்தாடை, இனிப்புகள் எனக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரையும் உற்சாகம்கொள்ள வைக்கும் கலர்ஃபுல் பண்டிகை. கொண்டாட்டம், குதூகலம் என்ற சொல்லுக்குப் பொருளே தீபாவளிதான். சிலர் இனிப்புகளால் குதூகலம் அடைவர், சிலருக்கு புத்தாடை தரும் மாபெரும் உற்சாகம், நண்பர்களைக் காண்பது, விருந்து உண்பது என்பதில் சிலருக்கு உற்சாகம்.

ஊருக்குப் போய் உறவுகளோடு ஒன்றாய் இருந்து கோலாகலமாய் கொண்டாடுவதில் சிலருக்கு உற்சாகம். தங்களுக்குப் பிடித்த நடிகரின் படத்துக்கு முன்பே டிக்கெட் புக் செய்து காத்திருந்து படம் பார்ப்பதில் சிலருக்கு உற்சாகம். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தீபாவளி என்பது ஸ்பெஷல்.இப்படி ஆனந்தம் பொங்கும் தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைப் போலவே ஆரோக்கியமாக, பாதுகாப்பாகக் கொண்டாடுவதும் முக்கியம். எனவே, பாதுகாப்போடு கொண்டாடி நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவோம் வாருங்கள்.

பட்டாசும் பாதுகாப்பும்!

பட்டாசு வெடிக்கும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தடிமனான பருத்தி ஆடைகளை அணியலாம். இதில் எளிதில் தீ பற்றாது. பட்டாசு வெடிக்கும்போது, விளக்குகளை ஏற்றும்போது ஜீன்ஸ், ஷார்ட்ஸ் போன்றவை அணிந்திருப்பது நல்லது. தழையத் தழைய ஆடைகளை அணியக் கூடாது. நீண்ட ஸ்கர்ட், லூஸ் பைஜாமா, வேட்டி போன்றவற்றையும் நைலான், சின்தட்டிக் ரக ஆடைகளையும் அணியக் கூடாது.

குழந்தைகள், பெரியவர்கள் துணையுடன் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுக்கு நேராக முகத்தை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருக்கும் போது திடீரென வெடித்தால், முகத்தில்தான் முதலில் காயங்கள் ஏற்படும். இதனால், கண்கள் போன்ற முக்கியமான உறுப்புகள் பாதிக்கப்படும்.பட்டாசுகளை வெடிக்க, நீண்ட ஊதுபத்திகளைப் பயன்படுத்தலாம். சாதாரண ஊதுபத்தி, மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தக் கூடாது.பட்டாசு கொளுத்தும்போது, காலணிகளை அணிந்திருக்க வேண்டும். ஹீல்ஸ் செருப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

வாண வேடிக்கை, ராக்கெட் போன்றவற்றைத் திறந்தவெளியில் வெடிக்கலாம். மண்ணில் புதைத்து வெடிப்பது, பட்டாசுகளை பாக்கெட்டில் வைத்திருப்பது, கைகளில் வைத்து வெடிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.பட்டாசு வெடிக்காமல் புகை மட்டும் வந்துகொண்டிருந்தால், அவற்றைத் தொடக் கூடாது. மேலே தண்ணீரை ஊற்றிவிட வேண்டும். எரிந்துவிட்ட மத்தாப்புகள், தீக்குச்சிகள் போன்றவற்றை நீர் நிறைந்த பக்கெட்டில் போட வேண்டும். கீழே எறிவதால் எவரேனும் மிதித்துவிட வாய்ப்பு உள்ளது. பட்டாசு வெடிக்கும் இடத்தில் ஓரமாக, வாளியில் நீர் வைத்திருக்கவும். தரையில் தீபங்களை ஏற்றக் கூடாது. ஓடி வரும்போது தீப்பற்ற வாய்ப்பு உள்ளது.

தனியாக வெடிப்பதைவிட குழுக்களாகச் சேர்ந்து, பெரியவர்கள் துணையுடன் வெடித்துக் கொண்டாடினால், பட்டாசுகளின் எண்ணிக்கையும் குறையும்; சுற்றுச்சூழல் மாசடைவதையும் ஓரளவுக்குக் குறைக்க முடியும்.பட்டாசு வெடித்து முடித்த பின்பு வெடிக்காமல் விட்ட பட்டாசுகளை எல்லாம் சேகரித்து அவற்றின் மருந்துகளை தனியாகக் கொட்டி தீ மூட்டி மகிழ்வர் சிறுவர்கள். இது மிக ஆபத்தான விளையாட்டு. வெடிக்காத பட்டாசுகளைத் தொடக் கூடாது. முடிந்தால் அதன் மேல் தண்ணீர் ஊற்றி அதை நமுத்துப் போகச் செய்வது நல்லது. குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுப்பி வைக்கும்போது இப்படியான விபரீத விளையாட்டுகளில் எல்லாம் இறங்குவார்கள். எனவே, பெரியவர்கள் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தீக்காயம் ஏற்பட்டவுடன் செய்ய வேண்டிய முதலுதவி!

தீக்காயம் பட்ட இடத்தில் உடனே சுத்தமான நீரை ஊற்ற வேண்டும். கொப்புளம் வரும் என நினைத்து, சிலர் சாக்குப்பையைக்கொண்டு அணைப்பர். இது தவறு. நீர் ஊற்றுவதால் கொப்புளம் வருவது இல்லை. அது நமது சருமத்துக்கு ஏற்படுத்தும் ஒரு பாதுகாப்புப் போர்வை. கொப்புளம் ஏற்பட்டால், காயம் ஆழமாகப் போகவில்லை என்று அர்த்தம். தண்ணீர் ஊற்றிய பிறகு சுத்தமான வெள்ளைப் பருத்தித் துணியால் காயத்தை மூடிக்கொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். சுயமருத்துவம் செய்யவே கூடாது. பேனா மை(Ink) தடவுதல், சாக்கைப்போட்டு தீயை அணைத்தல், வாழைச் சாறு தடவுதல், ஐஸ் ஒத்தடம் வைத்தல், மஞ்சள் தேய்த்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. இவ்வாறு செய்தால், காயம் மிகவும் மோசமாகிவிட வாய்ப்பு உள்ளது. மேலும், காயங்கள்் ஆற நீண்ட காலமும் ஆகும்.

தீபாவளியும் வெளியூர் பயணமும்

தீபாவளி முடிந்ததும் சிலர் குடும்பத்தோடு ஏதேனும் சுற்றுலாத் தளங்களுக்குச் செல்வது வழக்கம். கொண்டாட்டத்தை மேலும் கொண்டாட்டமாக்க இப்படியான ஐடியாக்கள் தோன்றுவது இயல்புதான். ஆனால், கூட்டம் குறைவாக இருக்கும் சுற்றுலாத் தளங்களைத் தேர்ந்தெடுங்கள். பொதுவாக, சுற்றுலா தளங்களில் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்குவதற்கான செலவு, உண்பதற்கான செலவு ஆகியவை அதிகமாக இருக்கும். மேலும், உணவுகள் தரமாக இருக்குமா என்பதையும் சொல்ல முடியாது. எனவே, இயன்ற வரை இப்படியான திட்டங்களைத் தவிர்த்திடுங்கள்.

தித்திக்கும் தீபாவளி!

பல வகையான இனிப்புப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிட்ட வயிற்றுக்கு இதமளிக்கும் எளிய மருத்துவங்கள் இங்கே…

நெஞ்சு எரிச்சலுக்கு…

சீரகம், தனியா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து, நீரில் கொதிக்கவிட்டு, கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.புதினா இலைகள், சீரகம், இந்து உப்பு போட்டு, தண்ணீரைக் கொதிக்கவிட்டு குடித்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கிவிடும்.

தித்திக்கும் தீபாவளி!

பலகாரங்களைச் சாப்பிட்ட பின்…

சுண்டை வற்றல் – 1 கைப்பிடி, சிறிதளவு கறிவேப்பிலை, ஓமம் – 1 டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன் ஆகியவற்றை வறுத்துப் பொடியாக்கி, உப்பு சேர்த்து, மோருடன் குடித்தால், அசௌகரிய உணர்வு நீங்கும். வயிற்றுப்போக்கும் நிற்கும்.

வாயுத் தொல்லைக்கு…

மிளகு, சீரகம், சுக்கு, ஓமம், கருஞ்சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்கவிட்டு இந்துப்பு கலந்து அருந்தலாம்.

தீபாவளி லேகியம்

தீபாவளி என்றாலே வகை வகையான இனிப்புகள், காரங்கள் நம்மை வந்து சேரும் ருசியான பண்டிகை காலம்தான். நாம் நாக்கை அடக்கினாலும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் சேர்க்கும் பலகாரங்கள் நம் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்ப்பவை. இதனால், சர்க்கரை நோய் முதல் பலவகையான நோய்களோடு போராடுபவர்களும் டயட் இருப்பவர்களும் ஆசையாய் ஒரு ஸ்வீட்டையோ காரத்தையோ பிய்த்து வாயில் போட்டுவிட்டு சில சமயம் ஒன்றிரண்டு துண்டுகள் அதிகமாகத் உண்டுவிட்டு செரிமானமாகாமல் அவதிப்படுவார்கள்.

அவர்கள் வீட்டிலேயே எளிதாகச் செய்ய லேகியம் உள்ளது. இந்த இதழிலேயே ‘தீபாவளி ஸ்பெஷல் உணவுகள்‘ என்ற பகுதியில் தீபாவளி லேகியம் செய்வது எப்படி என்பதற்கான ரெசிப்பி உள்ளது. அதைப் பயன்படுத்தி செரிமானமின்மையை ஒரு கை பாருங்கள்.

The post தித்திக்கும் தீபாவளி! appeared first on Dinakaran.

Tags : Dittikum Diwali ,Dr. Diwali ,Kudukalam ,Dhithikum Diwali ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில்...