×
Saravana Stores

ஜெயதேவர்

ஜெயதேவர் சென்ற இதழில்…

பக்த விஜயம் பகுதி – 3

பத்மாவதி தன் தந்தையை வழியனுப்பச் சென்ற போது, பக்தர் ஒருவர் வந்து ஜெயதேவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இனி…ஜெயதேவரைத் தன் வீட்டிற்கு அழைத்துப்போன வியாபாரி, அவரை விருந்தாளியாக மட்டுமல்லாமல் குருவாகவே எண்ணி வழிபட்டுப் பணிவிடைகள் செய்து வந்தார்.ஒரு மாத காலமானது. வியாபாரியின் அன்பும் பக்தியும் கலந்த பணிவிடைகளில் மகிழ்ந்த ஜெயதேவர், ‘‘பகவன்தாஸ்! நான் ஜகந்நாதபுரிக்குச் செல்ல விரும்புகிறேன்’’ என்றார்.‘உத்தமமான குருநாதரைப் பிரியப் போகிறோமே!’ என்ற எண்ணம் இருந்தாலும், குருவின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பது நம் கடமை என்று தீர்மானித்தார் வியாபாரி.

உடனே ஜெயதேவரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, பிறகு ஜெயதேவரைத் தன் தேரில் ஏற்றி ஊர் முழுதும் பவனி. வரச் செய்தார்; பிறகு அவருக்குத் துணையாக இரு காவலர்களைப் பாதுகாவலுக்கு ஏற்பாடுசெய்து, ஜெயதேவரைப் பில்வகாமிற்கு அனுப்பி வைத்தார். அவ்வாறு அனுப்பும்போது, தான் நல்ல வழியில் சேர்த்து வைத்திருந்த நவரத்தினங்கள், குரு காணிக்கை என ஏராளமான செல்வங்களைக் குருநாதருக்குத் தெரியாமல் தேரில் மறைத்து வைத்த வியாபாரி, அத்தகவலைக் காவலர்களிடம் சொல்லி எச்சரிக்கை செய்தார்; ‘‘இந்தப் பொருட்களையெல்லாம் குருநாதரின் மனைவியான பத்மாவதியிடம் ஒப்படைத்து விட்டு, வந்து என்னிடம் வந்து தகவல் தெரிவிக்க வேண்டும்!’’ என்று உத்தரவும் இட்டார்.

ஜெயதேவர் ஏறி அமர்ந்ததும் தேர் புறப்பட்டது. வழியில் பல காடுகளையும் அடர்ந்த வனங்களையும் தாண்டிப் போக வேண்டியதாக இருந்தது. அதற்குள், ஜெயதேவரின் பாதுகாப்பிற்காக வந்திருந்த காவலர்கள் இருவரும், ‘‘எப்படியாவது இந்தத் தேரில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் கவர்ந்து விட வேண்டும்’’ என்று தீர்மானித்தார்கள்.

அந்த இருவரில் ஒருவன் உடனே ஜெயதேவரை நெருங்கி, ‘‘சுவாமி! அடியேனுகக்கு அவசரமாக ஒருவேலை இருக்கிறது. நான் போக வேண்டியிருப்பதால், தயவுசெய்து என்னை மன்னியுங்கள்!’’ என்று சொல்லி விலகினான். அதற்காகவே காத்திருந்ததைப் போல அடுத்தவன், ‘‘சுவாமி! நான் சொல்வதற்குள் அவன் முந்திக்கொண்டு விட்டான். என் மனைவிக்குப் பிரசவ காலம்; இன்றோ நாளையோ என்று இருக்கிறது. என்னை மன்னியுங்கள்! அவள் அருகில் நான் இருக்க வேண்டும்’’ என்று சொல்லிப் போனான். தேர் போய்க் கொண்டிருந்தது.

காவலுக்கு வந்திருந்த இருவரும் சற்று நேரம்வரை, ஜெயதேவர் போகும் தேரை நோட்டம் பார்த்துக்கொண்டு, தங்கள் உருவங்களை வழிப்பறிக் கொள்ளையர்கள் போல மாற்றிக் கொண்டார்கள். பிறகென்ன? தாங்கள் எண்ணியதை உடனே செயல்படுத்தத் தொடங்கினார்கள்; ஜெயதேவரின் தேரை வழிமறித்து, தேரோட்டியை அடித்து விரட்டினார்கள்; தேரில், வியாபாரியால் வைக்கப் பட்டிருந்த செல்வங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டார்கள்.

அதன் பிறகுகூட அந்தத் தீயவர் களின் மனது அடங்க வில்லை; ‘‘ஏய்! இந்த ஆளை இப்படியே விட்டால், நமக்கு ஏதாவது பிரச்னை வரலாம்! அதனால் இந்த ஆளையும் ஒரு கை பார்த்து விடலாம்’’ என்று பேசிக் கொண்டார்கள். தீயவர்களின் தீய எண்ணங்களும் நல்லவர்களின் நல்ல எண்ணங்களும் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வந்து விடும் என்பது உண்மையானது. திருடர்கள் இருவரும் ஜெயதேவரின் கை-கால்களை வெட்டி முடமாக்கி, அவரை அங்கிருந்த, ஒரு பாழுங்கிணற்றில் தூக்கி வீசினார்கள்.

(பாகவதர்களின் வரலாறுகளை எல்லாம் சொல்லி்க் கொண்டு வந்த நாபாஜி சித்தர், ஜெயதேவரின் துர்பாக்கியமான இந்த நிகழ்வை எண்ணித்தான், கண்ணீர் வடித்தார். சென்ற இதழில் பார்த்தோம் அதை)கை-கால்கள் வெட்டப்பட்டுப் பாழுங்கிணற்றில் வீசப்பட்ட ஜெயதேவரை, அங்கிருந்த முட்களும் கூரான கற்களும் குத்திக்கிழித்தன. அவருடைய உடம்பில் இருந்து ஆங்காங்கே ரத்தம் வெளிப்படத் தொடங்கியது; கிணற்றில் அங்கும் இங்கும் மோதிக்கொண்டு விழுந்ததால், ஏற்பட்ட காயங்கள் வலியை ஏற்படுத்தின; கைகளும் கால்களும் வெட்டப்பட்ட இடங்களில் இருந்து வெளிப்பட்ட ரத்தம், பூச்சிகளை வரவழைத்துக் கடிக்கச்செய்தது.

இவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவில் பசியும் சேர்ந்து கொள்ள, ஜெயதேவர் மயங்கி அப்படியே அந்தப் பாழுங்கிணற்றில் விழுந்தார். சற்று நேரம் ஆனது. மெள்…ள மயக்கம் தெளிந்தது. அதே வேளையில் உடம்பு தன் வேலையைக் காட்டியது. ஆங்காங்கே வலியும் பசியும் வெளிப்பட்டு, ஜெயதேவரை வருத்தத் தொடங்கின. ஜெயதேவர் அழத் தொடங்கினார். அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவர் உடம்பில் வழிந்து, ரத்தத் துளிகள் எல்லாவற்றையும் கழுவின.

ஜெயதேவர் கதறத் தொடங்கினார்; ‘‘கண்ணா! பண்டரிநாதா! அபயம்! அபயம்! பக்தவத்சலா! உன்னை நினைத்துக் கும்பிட முடியாத நிலைக்கு, என் கைகள் ஆகி விட்டனவே! உன் கோவிலை வலம்வர முடியாத நிலைக்கு என் கால்கள் ஆகி விட்டனவே! இந்தப் பிறவியில் ஒரு பாவமும் செய்து அறியாத என்னை, இந்தப் பாழுங்கிணற்றில் கை-கால்கள் வெட்டப்பட்டு தள்ளப்பட்ட நிலைக்குக் காரணம்? போன பிறவியில் செய்த பாவங்கள் தாம் காரணமா பகவானே! உன்னை வணங்கக் கைகள் இல்லாமல் கதறுகின்றேன் தெய்வமே! அபயம்! அபயம்!’’ என்று கதறினார்.
ஜெயதேவர் இவ்வாறு கண்ணீர் விட்டுக்கதறிய அதே. வேளையில்…

வைகுண்டத்தில் இருந்த நாராயணர் திருமேனியில் வியர்வைத் துளிகள் துளிர்த்தன. உடனே அவர் கருடனை நினைக்காமல்-திருமகளிடம் சொல்லாமல்-தேவர்களைப் பார்க்காமல்- தம்மையும் மறந்து யார் கண்களிலும் புலப்படாமல் விரைந்தார்; ‘‘பக்தா! ஜீவன் முக்தா! தான் எனும் அகந்தையை நீக்கியவனே! இதோ! வந்து விட்டேன்!’’ என்று சொன்னபடியே விரைந்தார்.

அப்போது அவர் சூடியிருந்த மாலைகள் கழன்று விழுந்தன; பீதாம்பரம் நழுவியது; சுதர்சனம், மகாவிஷ்ணுவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தொடர்ந்தது; தேவர்கள் மலர் மாரி பொழிந்தார்கள்; அஷ்டதிக் கஜங்கள் (எண் திசை யானைகள்) ஆகாயத்தை நோக்கித் துதிக்கைகளைத் தூக்கிப் பிளிறின; பூதேவி மகிழ்ந்தார்; தேவி திகைத்தார்; ஆதிசேஷன் வியந்தார்.
சுற்றி நடந்த இவ்வளவு நிகழ்வுகளையும் கவனிக்காமல் ஒதுக்கிய நாராயணர், ஜெயதேவர் விழுந்து கிடந்த பாழுங்கிணற்றிற்கு வந்தார்; ஜெயதேவரின் ஞான திருஷ்டியில் காட்சி தந்தார். ‘‘ஜெயதேவா! என்னை முழுமையாகத் தரிசித்துக் கொள்!’’ என்றார். ஜெயதேவர் தரிசித்தார்; பலவாறாகப் பகவானைத் துதித்துப் புகழ்ந்தார்.

(தொடரும்…)

தொகுப்பு: பி.என்.பரசுராமன்

The post ஜெயதேவர் appeared first on Dinakaran.

Tags : Jayadevar ,Padmavati ,
× RELATED ஜெயதேவர்