இந்நிலையில் சிதம்பரம் ரயில் நிலையத்தை நவீன மயமாக்கும் திட்டத்தின்படி ரயில் நிலையங்களின் முன்புறம் சாலை அமைக்கப்பட்டு, புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டது. பார்க்கிங் வசதி மற்றும் நடைமேடைகளில் பளிங்கு கற்களால் வழுவழுப்பான தரைதளம் அமைக்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்லும்போது வழுக்கி விழும் நிலை உள்ளது. டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள், காத்திருப்பு அரங்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரைதளம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகிறது.
இந்த பணிகள் அனைத்தும் நீண்ட நாட்களாக மந்த கதியில் நடப்பதால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் பாதிப்படைகின்றனர். மேலும் ரயில் நிலைய பிளாட்பார்ம் பகுதிகளில்
ஒருசில இடங்களில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. அதேபோல் நடைமேடை அருகே நடைபெற்று வரும் பணிகளின் இடையே ஆங்காங்கே சில இடங்களில் பள்ளங்கள் தோண்டி செம்மண் குவியிலாக உள்ளது. இதனால் நடைமேடை பகுதி வழியாக செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
நடைமேடை அருகே நடைபெறும் பணிகளுக்காக தளவாடப் பொருட்கள், இரும்பு கம்பிகள் போன்றவை அப்பகுதி ஓரமாக அதிக அளவில் வைத்துள்ளனர். இதனால் வேகமாக ரயிலில் ஏறுவதற்கு வருபவர்கள் இந்த கம்பிகள் மீது எதிர்பாராத விதமாக மோதி படுகாயமடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் பாதிப்படைகின்றனர்.
மேலும், வெளிப்புற பகுதி நுழைவாயில் அருகே நடக்கும் பணியும் மந்தமான நிலையிலேயே நடைபெற்று வருகிறது. எனவே ரயில் நிலையத்தில் மந்த கதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
The post மந்த கதியில் நடைபெற்று வரும் சிதம்பரம் ரயில் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.