ஓசூர்: ஓசூர் அருகே, பட்டாசு குடோனில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த 33டன் பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், குடோனுக்கு சீல் வைத்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தற்காலிக மற்றும் நிரந்தரமான பட்டாசு கடைகள் வைத்து பட்டாசு வியாபாரம் நடைபெற்று வருகிறது. இது தவிர, பட்டாசு கடை உரிமையாளர்கள் குடோனிலும் பட்டாசுகளை சேமித்து வைத்து, அவ்வப்போது எடுத்து வந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஓசூர் பெத்தஎலசகிரி பகுதியில், குடோனில் உரிய அனுமதியின்றி, அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தனிப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, குடோனில் 1500 கிலோ பட்டாசுகள் இருப்பு வைப்பதற்கு அனுமதி வாங்கி, 33 ஆயிரம் கிலோ பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, குடோனில் வைக்கப்பட்டிருந்த 33 டன் பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், அந்த குடோனை பூட்டி சீல் வைத்தனர்.
The post அனுமதியின்றி வைத்திருந்த 33 டன் பட்டாசு பறிமுதல்: ஓசூர் அருகே குடோனுக்கு சீல் appeared first on Dinakaran.