மெரினா, பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை: துணை முதல்வர் உதயநிதி தகவல்

சென்னை: மெரினா, பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை அமைக்கப்படும், என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள கடற்கரைகளை அனைவருக்கும் ஏற்ற வகையிலாக மாற்றும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மனல் பரப்பில் சென்று கடலை ரசிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பாதையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. கடற்கரையின் மணல் பரப்பில் வீல் சேருடன் சென்று கடல் அலையில் விளையாடும் வகையில் மெரினா கடற்கரையில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது.

அதை தொடர்ந்து, பெசன்ட் நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக மரப்பலகை பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், துணை முதல்வர் உதயநிதி நிருபர்களிடம் கூறியதாவது: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் விடியல் பயணம் திட்டத்தை அறிவிக்கும்போது அதில் மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாமல் அரசு பேருந்துகளில் பயணிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000ஆக இருந்ததை ரூ.1,500 என்று உயர்த்தி வழங்கியுள்ளார்.

சட்டமன்றத்தில் என்னுடைய முதல் பேச்சிலேயே மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக குரல் கொடுத்தேன். இப்படி திமுக அரசு என்றைக்கும் மாற்றுத்திறனாளின் நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் ஏதுமின்றி கடலை ரசிக்க வேண்டும். கடல் அலையில் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும் என்று நம்முடைய முதல்வர், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதையை உருவாக்கினார்.

ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில், 225 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை, 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்து. அந்த பாதையில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தினமும் மெரினாவை ரசித்து வருகிறார்கள். மெரினாவில் கிடைத்து வரும் இந்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு கடற்கரைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு பாதை அமைக்க மாற்றுத்திறனாளிகள் பலர் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் சகோதரர் தீபக் நாதன் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டினார். இதன்படி ரூ.1 கோடியே 61 லட்சம் மதிப்பீட்டில் பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை 189 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த பணியை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின்
பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நானும், மாநகராட்சி ஆணையாளரும் ஆய்வு செய்துள்ளோம். இதனை விரைந்து முடித்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி இருக்கின்றோம். மேலும் பல கோரிக்கைகளை மாற்றுத்திறனாளிகள் முன் வைத்துள்ளார்கள். அதன்படி பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இதேபோன்ற சிறப்பு பாதையை அரசு விரைவில் அமைக்க உள்ளது.

சென்னை மட்டுமின்றி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை அமைக்கப்பட உள்ளது. ஒரு மாதத்தில் அந்த பணி ஆரம்பிக்கப்பட்டு 5 மாதங்களில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், உள்பட அரசு உயர் அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மெரினா, பெசன்ட் நகரை தொடர்ந்து திருவான்மியூர் கடற்கரையிலும் விரைவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக பாதை: துணை முதல்வர் உதயநிதி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: