பொங்குபாளையம் ஊராட்சி பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு

அவிநாசி: திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையம் அருகே உள்ள பள்ளிபாளையம் கிராம பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமான காலாவதியான கல்குவாரியில் குப்பைகளை கொட்டுவதற்கு மாநகராட்சிக்கு சொந்தமான 4 வாகனங்களில் குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு இந்த பகுதிக்கு கொண்டு வந்தனர். தகவலறிந்த கிராம மக்கள் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சிக்கு சொந்தமான 4 வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

பொங்குபாளையம் ஊராட்சியில்,பரமசிவம்பாளையம் பள்ளிபாளையம்,காளம்பாளையம்,பாபுஜி நகர், போன்ற கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.குப்பைகளை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவததுடன் இதன்மூலம் பல நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இங்கு குப்பைகளை கொட்ட வேண்டாம் என்றும் கூறி,கிராம மக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து காலாவதியான கல்குவாரியில் குப்பை கொட்ட வந்த 4 வாகனங்களை தடுத்து நிறுத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த வருவாய் துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன் பேசுகையில்: பொங்குபாளையம் ஊராட்சி காளம்பாளையம் அருகே உள்ள பள்ளிபாளையம் கிராம பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமான காலாவதியான கல்குவாரியில் மாநகராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொண்டு பராமரிக்கவும், கழிவுகளை இப்பகுதியில் கொட்டவும் கலெக்டர் கிறிஸ்துராஜ் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தக்கழிவுகள் அறிவியல் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல் முறையாக அகற்றப்படும் என்று தாசில்தார் மகேஸ்வரன் தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும் .குப்பை கொட்டுவதை நிறுத்தாவிடில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.

The post பொங்குபாளையம் ஊராட்சி பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட கிராம மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: