கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்பு தொடங்க அரசு அனுமதி: அரசாணை வெளியீடு

சென்னை: சென்னையில் கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையானது ரூ.230 கோடியில் தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் 1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி தமிழ்நாடு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில், துணை மருத்துவ படிப்புகள் (பாரா மெடிக்கல்) தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: 2024-25ம் கல்வியாண்டில் சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்புகள் தொடங்க மருத்துவ கல்வி இயக்குநர் அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இக் கோரிக்கையை கவனமாக பரிசீலித்த அரசு, 8 சான்றிதழ் படிப்புகள், 2 டிப்ளமோ படிப்புகள், 1 பட்ட படிப்பு என 11 துணை மருத்துவ படிப்புகளை தொடங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி, மயக்கவியல் நிபுணர், அறுவை கூடம் தொழில்நுட்ப உதவியாளர், டயாலிசிஸ் உதவியாளர், அவசர சிகிச்சை உதவியாளர் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகள், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், கதிரியக்கவியல் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிப்புகள், பி.எஸ்சி. நியூரோ எலக்ட்ரோபிசியாலஜி ஆகிய பட்ட படிப்பும் தொடங்கப்பட உள்ளன. இதில் சான்றிதழ் படிப்புகளுக்கு 1 வருட படிப்புடன் 3 மாத பயிற்சியும், டிப்ளமோ படிப்புகளுக்கு 2 வருட படிப்புடன் 3 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சியும், பட்டப் படிப்புக்கு 3 ஆண்டுகளுடன் 1 வருட பயிற்சியுடன் இந்த படிப்புகள் வழங்கப்பட உள்ளன.

சான்றிதழ் படிப்பு ஒன்றுக்கு 20 இடங்களும், டிப்ளமோ 20, பட்டப் படிப்பு 5 என மொத்தம் 195 இடங்கள் உள்ளன. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கூறுகையில், எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் படிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.

குறைந்த மதிப்பெண் எடுத்து மருத்துவ படிப்பில் சேர முடியாத பல மாணவ-மாணவிகள் இதனால் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் துணை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் கூடுதலாக தற்போது நமக்கு 195 இடங்கள் கிடைத்துள்ளன. வருகிற டிசம்பர் மாதம் இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கப்படும் என்றார்.

The post கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்பு தொடங்க அரசு அனுமதி: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: